விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை அடுத்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ளூர் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் விமானத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விமானத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்:
இலங்கைக்கு தற்போது ஓரளவு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் போக்குவரத்து சேவையாக விமான துறை இருக்கிறது. இலங்கையின் சுற்றுலாத்துறை முற்று முழுவதுமாக இந்த விமான போக்குவரத்தை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில் விமானத்துக்கான எரிபொருளிலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது நிலமையை மிகவும் மோசமடைய செய்திருக்கிறது. ஆகையால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களை தமக்குத் தேவையான அளவு எரிபொருட்களை நிரப்பி வருமாறு இலங்கை விமானத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. ஆகையால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
போக்குவரத்து செலவு அதிகரிக்கும்:
எரிபொருள் தட்டுப்பாட்டால் சர்வதேச விமானங்கள் இலங்கைக்குள் வரும் எண்ணிக்கையை குறைப்பதற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. விமானங்கள் இலங்கை வந்து திரும்பிச் செல்வதற்காக எரிபொருளை நிரப்பி வருவதால் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் ஏற்றி வரும் பொருட்களின் அளவு குறைவடையும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் விமானங்கள் வேறு நாடுகளில் மீண்டும் தரை இறங்கி எரிபொருட்களை நிரப்பி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவ்வாறு செய்தால் விமானங்களுக்கான போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் சர்வதேச விமானங்கள் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இலங்கைக்கான விமான போக்குவரத்து மட்டும் பயன்படுத்தப்பட்டால் சரக்கு மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு, இலங்கைக்கு இன்னும் பாதிப்பையே ஏற்படுத்தும். அதேபோல் விமான சேவை குறைக்கப்படும் பட்சத்தில் டிக்கெட்டுக்கான விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இலங்கைக்கு தற்போது வரை 42 நாடுகளின் விமான சேவைகள் போக்குவரத்தை மேற்கொள்கின்றன. இதில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் மீண்டும் திரும்பி செல்லும் போது எரிபொருட்களை இலங்கையில்தான் நிரப்பி செல்கின்றன. அதேபோல் பெரிய அளவிலான விமானங்கள் மட்டுமே திரும்பிச் செல்வதற்கான எரிபொருளை தாமே சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
தலைவர்களின் கையில்:
ஆகையால் விமான எரிபொருளுக்கான கொள்வனவை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இலங்கை இந்த பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளிலும் பிரச்சனைகளுக்கு, சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் உள்ளூர் போக்குவரத்திற்கான எரிபொருட்கள் இல்லாமல் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது விமான சேவையையும் மட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இலங்கையின் பொருளாதார பிரச்சினை என்பது இடியாப்ப சிக்கலாக மாறியிருக்கிறது. இதனை எவ்வாறு சரி செய்வது என்பது அந்நாட்டு அரசியல் தலைவர்களின் கையில் தான் இருக்கிறது.