ஜெர்மனியில் 100க்கும் மேற்ப்பட்ட விஷ பாம்புகளுடன் பெண் ஒருவர் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு விரைந்த பெண் :
ஜெர்மனி நாட்டில் ஹன்னோவருக்கு அருகிலுள்ள சால்ஸ்கிட்டரில் உள்ள மருத்துவமனைக்கு அதிகாலை அவசர கதியில் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 35 வயது இருக்கும். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கையில் காயம் ஒன்றுடன் வலியிலும் பயத்திலும் துடிப்பதை கண்டுள்ளனர். காயம் குறித்து விசாரித்த மருத்துவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அதாவது அந்த பெண் தனது செல்லப்பிராணிகளுள் ஒன்றான ரேட்டில் ஸ்னேக் தனது விரலைக் கடித்துவிட்டதாக மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார்.
மேல் சிகிச்சை:
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் ஹானோவர் மருத்துவப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஹாம்பர்க்கில் உள்ள டிராபிகல் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து ஒரு மாற்று மருந்து வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் விசித்திர பதில் குறித்து காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கில் பாம்புகள் :
ஜெர்மனியில் உள்ள வொல்ஃபென்பட்டெல் மாவட்டத்தின் செஹல்டே பகுதிக்கு போலீசார் விரைந்துள்ளனர். சென்றவர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. ஏனென்றால் அங்கு அந்த பெண் ஒரு பாம்பு பண்ணையே நடத்தி வந்துள்ளார். கிட்டத்தட்ட 110 விஷத்தன்மை கொண்ட பாம்புகள் இங்கும் அங்குமாக நெளிந்துக்கொண்டிருந்தன. அவை தகுந்த பராமரிப்பில் வைக்கப்படவில்லை என்றும் அவற்றுள் பல விஷத்தன்மை கொண்ட ரேட்டில்ஸ்னேக் வகை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பாம்புகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரேட்டில் ஸ்நேக் (Rattlesnake):
ரேட்டில் வகை பாம்புகள் அதிக விஷ தன்மை கொண்டது. இது கடித்தவுடன் இதன் விஷம் உடலுக்குள் வேகமாக பரவி உடலில் இருக்கும் திசுக்களை அழிக்கும் வல்லமை கொண்டது. இதனால் உடனடியாக உடல் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படும் . இதற்கு உரிய நேரத்தில் உடனடியான சிகிச்சை அவசியம் . என்னதான் இது கொடூர வகை பாம்பாக இருந்தாலும் கூட இவற்றின் தீவிர விஷத்தை கொண்டுதான் பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.