இலங்கையில் ஆளும் வர்க்கத்திற்கு சவால் விடுத்து உலகையே மிரள வைத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆளும் தரப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொழும்பு காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையகப்படுத்தப்பட்டு இருந்த அதிபர் அலுவலகமும், வளாகமும் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு மற்றும் காவல்துறை தரப்பினர் காலி முகத்திடல் பகுதிக்குள் நுழைந்தனர். காலிமுகத்திடல் வீதியின் இரு மருங்கிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை அப்புறப்படுத்தியதுடன் அதிபர் செயலகத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களையும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டப் பகுதிக்குள் அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவங்களின்போது சில ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த சிலரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினரும் ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதையடுத்து, வெள்ளிக்கிழமை (இன்று) மதியத்திற்குள், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேற திட்டமிட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். ஏப்ரல் மாதத்திலிருந்து போராடி வரும் போராட்டக்காரர்களுக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களையும் ராணுவ வீரர்கள் அகற்றி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்