இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கலவரம் வெடிக்க, நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். ஜூலை மாதம் மத்தியில் தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பியுள்ளார்.


இலங்கை ஸ்ரீமாவோ பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த அவரை அவரது கட்சியைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் விமான நிலையத்தில் சந்தித்தனர். கோத்தபய ராஜபக்சேவுடன் அவரது மனைவி லோமா ராஜபக்சேவும் வந்தார்.


அங்கிருந்து அவர் அரசாங்கம் அவருக்காக ஒதுக்கியுள்ள ரகசிய பங்களாவுக்கு சென்றார். அந்த பங்களா பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேபோல் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்த கட்சியினரும் கூட அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி ஏதும் தெரிவிக்க மறுத்து கமுக்கமாகவே சென்றனர்.


இருப்பினும் விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்சே வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் முதலில் மார்ச் 31ஆம் தேதி வீதியில் இறங்கி முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.




தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்தனர். ஜூலை 9 ஆம் தேதி அன்று கொழும்பில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம், அவரது அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் இல்லம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 


இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் தலைமறைவாக இருந்தார். பின்னர் மாலத்தீவு தப்பிச் சென்றார். ஒரு நாட்டின் அதிபர் மக்கள் போராட்டத்தால் தப்பிச் சென்றது சர்வதேச கவனம் பெற்றது. மாலத்தீவிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப அங்கிருந்து அவர் சிங்கப்பூர் தப்பிச் சென்றார். கடந்த ஜூலை 14 ம் தேதி ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.   


சிங்கப்பூரில் தங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் அவர் தாய்லாந்திற்கு இடம் பெயர்ந்தார். தாய்லாந்தில் 90 நாட்கள் வரை மட்டுமே தங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகின. இந்நிலையில் தான் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.


கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு அண்மையில் சர்வதேச நிதிய அதிகாரிகள் வந்து ஆலோசனை நடத்தினர். சர்வதேச நிதியம் நடவடிக்கை எடுத்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.