பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை பெற்று வரலாற்றில் இடம்பிடித்த ரிஷி சுனக், சனிக்கிழமையன்று தனது அணியினருக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். "ரெடி ஃபார் ரிஷி" என்ற பெயரில் ரிஷிக்கு ஆதரவாக பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.


 






போரிஸ் ஜான்சனுக்கு அடுத்தபடியாக கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களித்த உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸே வெற்றி பெறுவார் என முடிவு வெளியாகியுள்ளது. பெரும்பாலான இங்கிலாந்து ஊடகங்களும் இதையே பிரதிபலித்துள்ளன.


லிஸ் ட்ரஸ் வெற்றி வேட்பாளராக வருவார் என கணிக்கப்பட்டாலும் பிரசாரத்தை நம்பிக்கையுடன் நிறைவு செய்துள்ளார் ரிஷி சுனக். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. எனது சகாக்கள், பிரச்சாரக் குழு மற்றும், நிச்சயமாக, என்னைச் சந்தித்து உங்கள் ஆதரவைக் கொடுக்க வெளியே வந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. திங்கள்கிழமை உங்களை பார்க்கிறேன்! #Ready4Rishi" என பதிவிட்டுள்ளார்.


42 வயதான பிரிட்டன் இந்திய வம்சாவளியும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக், பணவீக்கத்தை சுற்றியே தனது பிரசாரத்தை கட்டமைத்தார். சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்கொள்வது, குற்றத்தை எதிர்த்து போரிட்டு பிரிட்டனை பாதுகாப்பாக மாற்றுவது என 10 அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ளார். 


கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த கிட்டத்தட்ட 1,60,000 உறுப்பினர்கள், ஆன்லைன் மற்றும் தபால் மூலம் வாக்களித்துள்ளதாக கன்சர்வேடிவ் பிரச்சார தலைமையகம் கணித்துள்ளது. வெற்றியாளர் என்பதை திங்கள்கிழமை மதியம் 1230 மணிக்கு கன்சர்வேடிவ் எம்பிக்கள் குழுவின் தலைவர் சர் கிரஹாம் பிராடி அறிவிப்பார்.


வெற்றியாளர் யார் என அறிவிப்பு வெளியாவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே ரிஷி மற்றும் லிஸ் ஆகியோருக்கு தெரிவிக்கப்படும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், மத்திய லண்டனில் உள்ள ராணி எலிசபெத் II மாநாட்டு மையத்தில் - டவுனிங் தெருவுக்கு அருகில் - முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் சுருக்கமான ஏற்பு உரையை நிகழ்த்துவார்.