போராட்ட களத்திற்குள் புகுந்த இராணுவத்தினர்  

 

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வரும் வரும் போராட்ட களத்திற்குள், நேற்று நள்ளிரவு புகுந்த இலங்கை இராணுவத்தினர்  போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்கதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக பொதுமக்களால்  கைப்பற்றப்பட்டிருந்த அதிபர் செயலகமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நள்ளிரவு தாக்குதல்:

 

நேற்று நள்ளிரவில் ஆயுதமேந்திய ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர், அதிபர் செயலகத்திற்குள் நுழைந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் செயலக  பகுதிகளில் இருந்த போராட்டக்காரர்களின்  கூடாரங்களை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலை ஏற்பட்டுள்ளது.



இராணுவத்தினரின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர்கள் பலர் பலத்த காயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் அங்கு களத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் மீதும் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கொழும்பு,காலிமுகத்திடல் பகுதிக்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

 

சுற்றி வளைத்து தாக்குதல்:

 

காலி முகத்திடல் பகுதியிலிருந்து கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம்  பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் அங்கிருந்து போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் அதிபர் செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அடுத்து காலிமுகத்திடல் பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து வீதிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.





 

களத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த நூற்றுக்கணக்கன இராணுவத்தினர்  புகுந்ததாக  போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

 


பதவியேற்ற முதல் நாள்:

 

இதற்கு இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க அதிபராக பதவியேற்ற முதல் நாளில் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.