இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முதலாவதாக வாக்கினை செலுத்தினார். இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டாவது வாக்கையும், மூன்றாவது வாக்கை மஹிந்த அமரவீரவும் செலுத்தினர். வாக்கெடுப்பு முடிவடைந்ததையடுத்து வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் வாக்களித்துள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத போராட்டம் காரணமாக கோட்டபய ராஜபக்ச கடந்த வாரம் அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சவின் முன்னாள் ஆதரவாளரான டலஸ் அழகபெரும, இடதுசாரியான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அதிபர் தேர்வுக்கான போட்டிக்கு இருந்தனர்.
கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலக நேர்ந்தது.
மக்கள் போராட்டம் இலங்கையில் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோட்டபய ராஜபட்ச, அதிபா் பதவியை ஜூலை 14ஆம் தேதி ராஜினாமா செய்தாா்.
இதையடுத்து முதல்முறையாக ராஜபக்ச குடும்பம் மக்கள் முன் தோன்றி உள்ளது. ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் இடைக்கால அதிபர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் பீரிஸ் டலஸ் அழகபெருமவக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.