இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், எம்பி துலாஸ் அலகபெருமவுக்கு ஆதரவு அளிக்க தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. அதிபராக பதவி வகித்த கோட்டபயவின் மீதமுள்ள பதவி காலத்தை நிறைவு செய்வதற்காக புதிய அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.


இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணியின் செய்தி தொடர்பாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையில், "இந்த இடைத் தேர்தலில் சிறப்பான வேட்பாளர்கள் யாரும் இல்லை. அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் கடமை உள்ளது. 


இடைக்கால அதிபர் நாட்டை ஆளுவதற்கான சட்டபூர்வ, தார்மீக அதிகாரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை நாடாளுமன்றத்திற்கு உள்ளது. இடைக்கால அதிபர் அடுத்த தேர்தல் வரை நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பதவி வகிப்பார். அதிபர் வேட்பாளர்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்டதை அடுத்த துலாஸ் அலகபெருமவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.


அதிபராக தேர்வு செய்யப்பட்டால் பொருளாதார ஜனநாயக சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும், 21ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என அலகபெரும அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் தரப்படும்.


சிறுபான்மையினரின் உரிமைகள், உண்மை, நீதி மற்றும் போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழர் பிரச்னைக்கு நியாயமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வை அங்கீகரிக்க வேண்டும். முறையான, ஆழமான வேரூன்றிய மாற்றங்களை அரகலயா போராட்ட குழு கோருகிறது.


தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதே வேளையில், அனைவருக்குமான, ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கையை நம்பும் கட்சியாக, தேசிய பொருளாதார மீட்சிக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்" என்றார்.


இலங்கையில் வரலாறு காணாத போராட்டம் காரணமாக கோட்டபய ராஜபக்ச கடந்த வாரம் அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் மூலம் அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார். இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சவின் முன்னாள் ஆதரவாளரான துலாஸ் அலகபெரும, இடதுசாரியான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அதிபர் தேர்வுக்கான போட்டிக்கு நேற்று முன்மொழியப்பட்டனர்.


ரகசிய வாக்கெடுப்பின் மூலம் அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார். நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்ததையடுத்து போட்டி கடுமையாக மாறி உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண