ரணில் விக்கிரமசிங்க:
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு அரசியல் காரணிகளால் அந்நாட்டில் நிகழும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இச்சூழலில், இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் ஏமாற்றம் அடைந்த இலங்கை விளையாட்டுத் துறை தங்களுடைய கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது. முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லாத நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சம் அறிவித்திருந்தது.
அதற்கு இலங்கை வாரியத்தின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இலங்கை கிரிக்கெட் அணியை விரைவில் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று உறுதியளித்தனர்.
ஐசிசி அறிவிப்பு:
இச்சூழலில், நீதிமன்றம் விளையாட்டு அமைச்சகத்தின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தான் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளை இலங்கை அணி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் அது தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் என்றும் ஐசிசி கூறியது.
அதிபர் மீது குற்றச்சாட்டு:
இது போன்ற சூழலில் தான் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தன்னுடைய உயிருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆபத்து உள்ளது என்று தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். மேலும், எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதிபர் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பதவி நீக்கம்:
இந்நிலையில் , நேற்று (நவம்பர் 27) அந்நாட்டின் அமைச்சரவை கூடியது. அப்போது அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இளைஞர் விவகாரம், நீர்ப்பசனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக உத்தரவிட்டார்.
தற்போது இந்த உத்தரவை அடுத்து, “இலங்கை கிரிக்கெட்( Sri Lanka cricket ) நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் மோசடிகளை நான் வெளிக்கொண்டு வருகிறேன். அதனால் தான் நான் நீக்கப்பட்டுள்ளேன்” என்று ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.