பப்புவா நியூ கினியாவில் வடக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.






பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெவாக் நகரம் கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 8.46 மணிக்கு 12 கிலோமீட்டர் (ஏழு மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கங்கள் பொதுவானவை, இது "ரிங் ஆஃப் ஃபயர்" அதாவது தென்கிழக்கு ஆசியா - பசிபிக் படுகையில் பரவியிருக்கும் தீவிர டெக்டோனிக் செயல்பாட்டின் வளைவின் மேல் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த மக்கள்தொகை கொண்ட காடு மேடுகளில் அவை பரவலான பாதிப்பை ஏற்படுத்தினாலும், அது  அபாயகரமான நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.


இந்த ஆண்டு ஏப்ரலில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நாட்டின் உள்பகுதியில் காடுகளால் சூழப்பட்ட பகுதியில் தாக்கியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில், அதிக மழைக்காடுகள் நிறைந்த கரவாரி பகுதியில் சுமார் 180 வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமானது.  கடந்த ஆண்டு செப்டம்பரில், 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கியது. மேலும், மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர்.


இதுவரை பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவே ஆகும். ஹெலா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.  பப்புவா நியூ கினியாவின் ஒன்பது மில்லியன் குடிமக்களில் பெரும்பாலானோர் நகரங்கள் அல்லாத பகுதிகளில் வசிக்கின்றனர். அதாவது மலை பகுதி, அடர்ந்த காடு ஆகிய இடங்களில் இருப்பதால் இதுபோன்ற இயற்கை பேரிடரின் போது மீட்பு பணிகள் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.