இந்திய, இலங்கை நாடுகளுக்கிடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. குறிப்பாக, இந்தியாவின் யுபிஐ சேவையை இலங்கையில் அறிமுகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.


"பிரதமர் மோடியின் தலைமையில் தொடர் முன்னேற்றம்"


இதை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை பாராட்டி பேசினார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்திய மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை உறுதி செய்வதில் பொருளாதார உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு நான் மோடியிடம் வாழ்த்து தெரிவித்தேன். 


இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த ஆண்டில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் இலங்கை சந்தித்த அசாதாரண சவால்கள் மற்றும் இந்த சவால்களை முறியடிப்பதில் பல முனைகளில் நான் முன்னெடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்தேன். 


நெருக்கடியான சூழலில் இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்தியா:


நமது நவீன வரலாற்றில் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு அளிக்கப்பட்ட ஒற்றுமை மற்றும் ஆதரவுக்காக நான் பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


புதிய துறைகளிலும் முக்கியமான துறைகளிலும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கு இந்தியா-இலங்கை இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் முக்கியமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். 


இந்தியாவின் தென் பகுதியில் இருந்து இலங்கைக்கு பல திட்ட பெட்ரோலியக் குழாய் அமைப்பதன் மூலம் இலங்கைக்கு மலிவு மற்றும் நம்பகமான எரிசக்தி வளங்களை வழங்க முடியும் என்று பிரதமர் மோடியும் நானும் நம்புகிறோம். நெருக்கடியான நேரத்தில் நீங்கள் எங்களுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவிற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி" என்றார்.


இலங்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட கலவரத்தால அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்ட பின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவே ஆகும்.


இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மட்டும் இன்றி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளார் இலங்கை அதிபர். 


இந்த பயணத்தின் போது இலங்கை அதிபருடன் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.