ஆளுநர்கள் அதிரடி நீக்கம்:
இலங்கை வட மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சார்ல்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வட மேற்கு மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேற்கு மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட ஆகியோர் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம்:
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தலைவராக உள்ள முத்துவிநாயகம் செந்தில் தொண்டமான், ஊவா மாகாணத்தின் முன்னாள் அமைச்சராகவும் ஊவா மாகாணத்தின் முன்னாள் தற்காலிக முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் அனைவரையும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனாலும், தமிழர்கள் இன பிரச்னை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உறுதி அளித்து வந்தாலும், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தொடரும் இலங்கை தமிழர்களின் பிரச்னைகள்:
சமீபத்தில் கூட, இலங்கை அரசு கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்பு மசோதா சர்ச்சைக்கு வழிவகுத்திருந்தது. குறிப்பாக, தமிழர்களை குறிவைத்து இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பிரச்னையை கையில் எடுத்த தமிழ் தேசிய கூட்டணி, போராட்டத்தில் ஈடுபட்டது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை மார்ச் மாதத்தின் மத்தியில் இலங்கை அரசு, அரசிதழில் வெளியிட்டது. இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு என தனி நாட்டை உருவாக்குவதற்காக 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் ஆயுதப் போரில் ஈடுபட்ட போது, அவர்களுக்கு எதிராக அரசாங்கப் படையினரால் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது.
நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யாமலேயே குற்றம் சாட்டப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தன்னிச்சையாக காவலில் வைக்க அனுமதிக்கும் PTA சட்ட விதிகளை சர்வதேச மனித உரிமைக் அமைப்புகளும் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சிகளும் கடுமையாக சாடியுள்ளன.
விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யாமலேயே 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை சிறையில் அடைத்து வைத்த சம்பவம் எல்லாம் இலங்கையில் நடந்தது. கடந்த 1979ஆம் ஆண்டு, தமிழ் போராளி குழுக்களை அடக்குவதற்கு இடைக்கால ஏற்பாடாக கொண்டு வரப்பட்டதுதான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்.