இலங்கை அரசியலில் அதிகாரமிக்க நபர்களில் ஒருவர் மகிந்த ராஜபக்சே. அவரது கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில், இலங்கை அதிபராகவும் 2002 முதல் 2004 மற்றும் 2018 முதல் 2019 வரையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். 


அரசியலில் தவிர்க்க முடியாத ஆளாக திகழ்ந்து வரும் மகிந்த ராஜபக்சே:


கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, அதிபராக பதவி வகித்தபோதும், 2019 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தபோதும் நிதித்துறையையும் அவரே கவனித்து வந்தார். அவர் அதிபராக பதவி  வகித்த காலத்தில்தான், விடுதலை புலிகளுக்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. தனது முதல் பதவிக்காலத்தில் நடந்த உள்நாட்டு போரில் விடுதலை புலிகளை தோற்கடித்தார். இதை தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றியை பதிவு செய்தார்.


ஊழல் செய்ததாகவும் போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் ராஜபக்சே மீது கடும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் ஆட்சியை பறி கொடுத்தார். இருப்பினும், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமராக பதவி ஏற்றார் மகிந்த ராஜபக்சே.


பழைமைவாத, பெளத்த பேரினவாதத்தை வைத்து அரசியல் செய்து வந்த ராஜபக்சேவுக்கு பேரிடியாக அமைந்தது இலங்கை பொருளாதார நெருக்கடி. வரியை குறைத்தது, விவசாயத்தில் ரசாயன உரங்கள் மீதான பயன்பாட்டுக்கு தடை விதித்தது போன்ற தவறான நடவடிக்கைகளால் இலங்கை பொருளாதாரம் ஆட்டம் கண்டது.


மீண்டும் கம்பேக்:


அதுமட்டும் இன்றி கொரோனா பெருந்தொற்று இலங்கை பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பிப்போட்டது. இலங்கை வரலாற்றில் அதுவரை நடந்திராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இதனால், உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மக்கள், ராஜபக்சே அரசுக்கு எதிராக வரலாறு காணாத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் துடைத்து எறியப்பட்டனர். அதிபர் பதவியில் இருந்து விலகிய கோத்தபய, நாட்டை விட்டே தப்பி சென்றார். முதலில் மாலத்தீவிற்கும் பின்னர் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திற்கும் தப்பி ஓடினார்.


கடந்தாண்டு மே மாதம், மக்களின் போராட்டத்துக்கு மத்தியில் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே. ஜூன் மாதம், நிதித்துறை அமைச்சர் பதவியை பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதரவுடன் அவர்களின் பரம எதிரியாக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே அதிபரானார்.


ஊழல் குற்றச்சாட்டு, போர் குற்றச்சாட்டு, இலங்கை பொருளாதார நெருக்கடி என பல சவால்களுக்கு மத்தியிலும் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சே. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மகிந்த ராஜபக்சே.


கொழும்புவில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சி தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ளார் மகிந்த ராஜபக்சே. அப்போது பேசிய அவர், "முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக ராஜபக்சே குடும்பத்தினர் மீது நியாயமற்ற முறையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது" என்றார்.


வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், "மீண்டும் வலுவாக வருவோம். நம்மைப் பற்றி அவதூறு செய்பவர்கள், கேலி செய்பவர்கள் தங்கள் வழியைத் தொடரட்டும். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நாங்கள் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறோம். விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்ட போதிலும் தொடர்ந்து வளர்ச்சியை உறுதி செய்தோம்" என்றார்.