பத்தாண்டுகளுக்கு முன்பு வரை (போர்) யுத்தத்தால் கண்ணீர் கடலில் தவித்த இலங்கை, இப்போது (பொருளாதார) யுத்தத்தால் கடனில் தவிக்கிறது. 


இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. 


இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி 448 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263-க்கு விற்கப்படுகிறது. சர்க்கரை கிலோ ரூ.280 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1.41 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. சிலிண்டரின் விலை 2,675 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விளிம்புநிலை மக்களுடன் நடுத்தரக் குடும்பத்தினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 





பல மணி நேர மின்வெட்டு


தலைநகர் கொழும்பு உட்பட நாடே பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கிறது. கோடைக் காலத்தில் மின்சாரத்தின் தேவை உயரும் சூழலில், மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் 287 ரூபாயாகச் சரிந்துள்ளது.


அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துகொண்டே வரும் சூழலில் காரணமாக, போதிய காகிதங்களையும் அச்சிட மையையும் இறக்குமதி செய்து வாங்க முடியாத நிலையில், சுமார் 45 லட்சம் மாணவர்கள் எழுதவிருந்த தேர்வுகளைக் காலவரையின்றி ஒத்திவைத்திருக்கிறது இலங்கை கல்வித்துறை.


மக்கள் போராட்டம்


நாட்டின் பல பகுதிகளில் உணவுப் பொருட்களுக்காகவும் எரிபொருளுக்காகவும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர். பெட்ரோல் பங்க்குகளில் ஏற்பட்ட மோதலால், ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் வாங்க வரிசையில் நின்றிருந்த முதியவர்கள் 3 பேர் வெயில் கொடுமை தாங்காமல் பலியானதாகவும் செய்திகள் வெளியாகின.




கொல்லும் விலைவாசியைத் தாங்க முடியாத தமிழ் மக்கள் பலர், தமிழ்நாட்டுக்கு அகதிகளாகத் தப்பி வருகின்றனர். சுமார் 4 ஆயிரம் தமிழர்கள் வரை இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரலாம் என்று கூறப்படுகிறது.


அண்டை நாடான இலங்கை, இத்தனை பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க என்ன காரணம்? விரிவாகவே பார்க்கலாம்.


அடிப்படையில் இந்தியாவைப் போல இலங்கையும் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடு. சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின் 1948-ல் பெற்ற விடுதலையால் மெல்ல நிமிரத் தொடங்கியது. 


எனினும் ஆட்சி முறையில் தன்னிகரற்ற அதிகாரங்களைக் கொண்ட அதிபர் பதவியும் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு வளங்கள் பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தப்பட்டன. நிலம், அரசுப் பணி, உதவித்திட்டங்கள், மானியங்கள் ஆகியவற்றை வழங்குவதில் அரசுத் தரப்பில் உரிய கட்டுப்பாடும் தரமும் கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. 




கடன் மேல் கடன்


இதனால் ஏற்பட்ட கடன்களை அடைக்கக் கூடுதல் கடன் வாங்கப்பட்டது. அதற்கு வட்டி கட்ட மேலும் மேலும் கடன் பெறப்பட்டது. தவறான பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றாலும் கடன் தொகை தாறுமாறாக அதிகரித்தது. 


இதற்கிடையே இலங்கையில் இருந்து வருமானம் எதுவும் உயர்த்தப்படவில்லையா என்ற கேள்வி எழலாம். இலங்கை பொருளாதாரத்துக்கு முக்கியத் தூண்களாக இருப்பவை, அல்ல அல்ல இருந்தவை தேயிலை, சுற்றுலாத் தொழில்கள். இலங்கை அரசு தாராளவாதத்தை அனுமதித்ததன் மூலம், தேயிலை, ரப்பர், தென்னை உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் வீழ்ச்சி அடைந்தன. 


அதேநேரத்தில் சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறைகள் அபாரமாக வளர்ச்சி அடைந்தன. மத்தியக் கிழக்கு, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, தங்களில் நாட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு டாலர்களில் பணம் அனுப்புவதன் மூலம் இலங்கை மக்களில் கணிசமானோர் பொருளாதாரத்தை மேம்படுத்தி வந்தனர். 


குண்டுவெடிப்பும் கொரோனாவும்


இந்த சூழலில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பெருநாள் அன்று இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில், 45 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் பரிதாபமாக பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.




தொடர்ந்து 2020-ல் உலகம் முழுக்கப் பரவிய கொரோனா பெருந்தொற்று இலங்கை சுற்றுலாத் துறையை அடியோடு பிடுங்கிப் போட்டது. வெளிநாடுகளில் வேலை பார்த்தோரும் வேலையிழந்து நாடு திரும்பினர். இதனால் இலங்கைப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியது. 


அந்நியச் செலாவணி பிரச்சினை


ஒரு நாடு தன்னுடைய பணத்தின் மதிப்பிற்கு ஈடாக பத்திரங்கள், வைப்பு நிதி ஆகியவற்றின் மூலம் வெளிநாட்டுப் பணத்தை குறிப்பாக டாலர்களை வைத்திருப்பதே அந்நியச் செலாவணி எனப்படுகிறது. இலங்கையின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்ததால் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதனால் இறக்குமதி பொருட்களுக்கு உரிய தொகையை அளிப்பதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது. 


அதேபோல அந்நியச் செலாவணி பிரச்சினையால், ரூபாயின் மதிப்பை மத்திய வங்கி குறைத்தது. இதனால் சந்தையில்அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. பணவீக்கமும் 15.1 சதவீதமாக உள்ளது. இது முன்னெப்போதைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.



அந்நிய நேரடி முதலீடு


வெளிநாடுகளில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடு குறைந்ததும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். 2018-ல் 1.6 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நிய நேரடி முதலீடு, அடுத்த ஆண்டே 793 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. 2020-ல் 548 பில்லியன் டாலர்களாகச் சரிந்தது. இதனாலும் அந்நியச் செலாவணி மதிப்பு குறைந்தது. 


சீனக் கடன்


பத்தாண்டுகளுக்கும் மேலாகவே சீனாவிடம் இருந்து கடன் பெற்று வருகிறது இலங்கை. 2022-ல் மட்டும் சுமார் 58 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய் கடனை, சீனாவிற்குத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. மொத்தமாக, சீனாவுக்கு மட்டும் 2.3 லட்சம் கோடி இலங்கை ரூபாய் கடனாளியாக நிற்கிறது இலங்கை. 


இதற்கிடையே, 'ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியத்திடம் இருந்து நிதி பெற மாட்டோம். அதற்கு பதிலாக சாத்தியமுள்ள மாற்றுகளை (சீனா) நாடுவதுதான் சிறப்பான வழிமுறையாக இருக்கும்' என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்ததும் கடன் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.  




இந்த சூழலில் கடந்த மார்ச் 17-ம் தேதி இலங்கைக்கு 100 கோடி டாலர் (ரூ.7,500 கோடி) கடனுதவியை இந்திய அரசு அளித்தது. 'அண்டை நாடுதான் முக்கியம். இலங்கை அத்தியாவசியப் பொருட்களை வாங்க இந்த உதவியை அளிக்கிறோம்' என்று இந்தியா அறிவித்தது. இதுதவிர ஐஎம்எஃப் உதவியை அந்நாட்டு அதிபர் ராஜபக்ச கோரியுள்ளார்.


பொருளாதார சிக்கலைச் சமாளிக்க சர்வதேச அளவிலான ஒரு சட்ட நிறுவனம் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதன் வழிகாட்டுதலின்படி நிதி நிலையைச் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவிடம் கடந்த டிசம்பர் மாதமே இலங்கை உதவி கோரிய நிலையில், சீனாவின் நிலைப்பாடு குறித்துத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


இந்நிலையில் இலங்கை தன்னுடைய கடன் பிரச்சினையில் இருந்து மீண்டெழுமா என்பது, அதன் கடனைப் போலவே பில்லியன் டாலர்கள் கேள்வியாக இருக்கிறது.