இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச இன்று காலை மாலத்தீவுகளுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அவருக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில், இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டபய இன்று காலை மாலத்தீவு தலைநகர் மாலியில் உள்ள வேலனா விமான நிலையத்திற்கு சென்று இறங்கினார். அவரை, மாலத்தீவு அரசு அலுவலர்கள் வரவேற்றனர்.
நேற்று இரவு கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோட்டபய, அவரது மனைவி, அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் Antonov-32 ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுகளுக்கு கிளம்பியதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அவர்கள் பயணம் மேற்கொண்டதாக இலங்கை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து இலங்கை விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், அதிபரின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில், கொழும்பு உள்ளிட்ட மேற்கு மாகாணங்களில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரம்பு மீறி செயல்படும் போராட்டக்காரர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு பிரதமர் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் பதவியை விக்கிரமசிங்க ராஜினாமா செய்ய வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்திற்குள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அனைத்து கட்சி அரசு பதவியேற்கத் தயாரானதும் தான் பதவி விலகப் போவதாக விக்கிரமசிங்க ஏற்கனவே கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்