இலங்கை அரசியலமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக, தற்போது இலங்கை அரசுக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்திருக்கும் பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இன்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்ட களத்தில் முன் நின்ற முக்கிய நபர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.




அதில், கோட்டா கோ கம போராட்டக் குழுவினரால் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள பொது நூலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம் ஏ சுமந்திரன், சாணக்கியன் மற்றும் மனோ கணேசன், ஜீவன் தொண்டமான், ஹர்சிடி செல்வா என முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


இந்த சந்திப்பில் கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் அனைத்து திட்டங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டங்களைத் தான் காலம் காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்து வந்ததாகவும் ஆனால் அவற்றை அரசு நிறைவேற்ற வில்லை எனவும் சுமந்திரன் இந்த சர்வ கட்சி கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.


இதில் போராட்டக் குழுவின் முக்கிய நபர்களால் இலங்கை அரசியலில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன குறித்த பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 20 ஆண்டுகளாக, ராஜபக்ச குடும்பத்தினரால் மோசடி செய்யப்பட்ட அரச நிதியானது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அரசுடமையாக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.




முதலில் அதிபர் கோத்தபாய ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும், அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டுமென கோட்டா கோ கம குழு தெரிவித்திருக்கிறது.


அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை ஒழிக்கப்பட்டு, அந்த அதிகாரங்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது முக்கிய அனைத்து துறைகளையும், தீர்மானங்களையும் அதிபரே வைத்துக் கொள்ளும் அந்த நிறைவேற்று அதிகாரத்தை மாற்றி பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேலும் கோத்தபாய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க அரசு பதவி விலகியவுடன் பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சியை  கருத்தில் வைத்து இடைக்கால அரசு உருவாக்கப்பட வேண்டுமென போராட்டக்காரர்களால்  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்ட பின்னர், அதனை கண்காணிக்கும் வகையில் பொதுமக்களை உள்ளடக்கிய  கவுன்சில் அமைக்கப்பட வேண்டுமென கோட்டா கோ கம பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.




இந்த இடைக்கால அரசில், தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், அந்த வகையில் நீண்ட கால திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி, பொது போக்குவரத்து சேவை, எரிபொருள், எரிவாயு, விவசாயம் போன்றவற்றை மீள கட்டி எழுப்புதல், சிறிய கடன் மற்றும் விவசாய கடன்களை ரத்து செய்தல், சிறு வியாபார கடன்களை ரத்து செய்தல் அல்லது அவற்றை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறையில் கொண்டு வரப்பட வேண்டும் என இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.


தற்போது இலங்கையில் நடத்தப்பட்ட மக்கள் எழுச்சியின் போது, கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கோட்டா கோ கம குழுவால் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.


அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். மேலும் கொலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்று கொடுக்க தனியான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அந்த குழுவால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


மோசடி செய்யப்பட்ட அரசின் நிதியை திரும்பப் பெற சட்டம் அமைத்தல், நிதி மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அத்துடன் அரசியல்வாதிகள் முறைகேடாக ஊழல் செய்து சேகரித்த சொத்துக்களை மீளப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள வரி முறைமையை தற்போது மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கோட்டா கோ கம குழுவால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.




அதேபோல் நாட்டு மக்களுக்கு சாதகமான முறையில் வரி கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர்களால் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து ,மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.


நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமை இலங்கையில் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பு, மக்கள் வாக்கெடுப்பு நடத்தியே உருவாக்கப்பட வேண்டும் என கோட்டா கோ கமா குழுவினரால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


உயிர் வாழும் உரிமை என்பது அடிப்படை உரிமையாகவும், நீதியான தேர்தல் நடைபெறும் முறை உருவாக்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் , மக்கள் பணி ஆற்றவில்லை என்றால் அவர்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும்  உரிமைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.


இலங்கையில் இனவாதம் ,தேசிய ரீதியிலான அழுத்தங்களை முழுமையாக இல்லாதொழித்து சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அடிப்படைச் சட்டம் இயற்ற வேண்டுமென பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருக்கிறது.


இலங்கையில் உள்ள சகல இனங்களின், மதம், மொழி, பால் மற்றும் ஏனைய கலாச்சார தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில்  பலமான அடிப்படை சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ,தமது  கட்சி அரசிடம் இவ்வாறான விஷயங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் அவை கண்டுகொள்ளப்படவில்லை என இந்த கூட்டத்தில் நினைவுபடுத்திருக்கிறார்.




தற்போது ஏற்படுத்தப்பட உள்ள இடைக்கால அரசில் மேற்குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென போராட்ட குழுவால் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் தற்போது அமைக்கப்பட உள்ள இடைக்கால அரசானது 12 மாத கால பகுதியில் அதாவது ஒரு வருடத்தில் ,புதிய அரசியலமைப்பை  உருவாக்க வேண்டும் என்ற கால அளவு போராட்டக்காரர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.


இன்று பிற்பகல் ஒரு மணிக்குள் ,இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவும் ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி உள்ளதாக  தகவல் வெளியாகியிருக்கிறது. பிரதமர் மற்றும் அதிபரை நாளை பதவி விலகுமாறு வலியுறுத்தி அதிபரின் செயலகத்தில் பொதுமக்களை நாளை ஒன்று கூடுமாறு டுவிட்டர் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.


நேற்று நடைபெற்ற, அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது பதவி விலகாவிட்டால் ,தற்காலிக அதிபராக அவர் பதவி ஏற்பதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்திருக்கிறார்.


ரணில் விக்கிரமசிங்க கடந்த 30 வருட காலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த தாகவும், அவர் பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது எனவும் போராட்டக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளை பிரதமரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ள சாணக்கியன் ,இருந்த போதும் அந்தச்சம்பவம் நடைபெற்றது சந்தேகத்திற்குரிய நடவடிக்கை என்ற ஒரு கருத்தையும் முன் வைத்திருக்கிறார்.


ஆகவே தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின் தொடர்ந்து போராடுவதை விட, தற்போதே அவர் பதவியை விட்டு விலக வேண்டுமென கூறி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


அதேபோல்  கோத்தாபய ராஜபக்ச நாளை பதவி விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக பதவியேற்றால் நாட்டில் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆகவே தனது பதவியை ராஜனாமா செய்யும் இலங்கை அதிபர் ,இறுதியாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் .


இதுவரை பிரதமர் பதவியில் இருந்த விலகுவது குறித்து ரணில் விக்கிரமசிங்க உறுதியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.