ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
மிக பெரிய வாயு கிரகமான WASP 96-bஇல் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா குறிப்பிட்டுள்ளது. 1,150 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த கிரகத்தின் சுற்றுப்பாதையில் நட்சத்திரங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நாசா ட்விட்டர் பக்கத்தில், "முதல்முறைாக, சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வளிமண்டலத்தில் மேகங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது" என பதிவிட்டுள்ளது.
நாசா, ஈஎஸ்ஏ (ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி) மற்றும் சிஎஸ்ஏ (கேண்டடியன் ஸ்பேஸ் ஏஜென்சி) ஆகியவை தொலைநோக்கி மூலம் எடுத்த முழு வண்ணப் படங்களின் முதல் தொகுப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட பிரபஞ்ச புகைப்படங்களிலேயே இதுதான் மிக தெளிவான ஒன்றாகும். நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி மற்றும் விண்மீன் திரள்களை புரிந்து கொள்வதற்கு இந்த அதி உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் பெரும் உதவியாக உள்ளது.
இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உள்ளது. இதன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சியில் உதவலாம் என நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் மனித இனம் வாழ்வதற்கு தகுதியான கிரகங்கள் குறித்தும் இதன் மூலம் தெரிய வரலாம்.
இதுகுறித்து பேசிய நாசா செய்தித்தொடர்பாளர், "புறக்கோள்களை ஆராய்வது இந்த மிஷினின் முக்கிய அங்கமாகும்" என்றார். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட முதல் படங்கள் வானியல் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்துள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபஞ்சம் உருவானது. அப்போது, பிரபஞ்சம் எப்படி காட்சி அளித்தது என்பதை தெரிந்து கொள்ள 1,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
தற்போது, இந்த தொலைநோக்கி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அறிவியலின் பெரும் உச்சமாக கருதப்படுகிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சத்தின் பால்வெளி திரள்களிலிருந்து வெளியான ஒளிகளை சேகரித்து இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தொலைதூர பிரபஞ்சத்தில் தோன்றும் ஒளி நம் பூமிக்கு வருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்