எரிபொருள் பற்றாக்குறை:
இலங்கையில் தற்போது அடுத்த மாதம் வரை மட்டுமே எரிபொருள் பாவனைக்கு இருப்பதாக, அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து விடுபட இந்தியா, சீனா அல்லது வேற ஏதாவது ஒரு நாடு, ஒரு பில்லியன் டாலர்களை வழங்கும் பட்சத்தில், குறைந்தது மூன்று மாதங்களுக்கு எவ்வித சிக்கலும் இன்றி மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார். இல்லையெனில், அடுத்த மாதம் முதல் மீண்டும் எரிபொருள் நெருக்கடி தொடரும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கட்டணம் செலுத்தப்பட்டு வாங்கப்பட்ட எரிபொருள், அடுத்த மாதம் வரை மட்டுமே எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கடுத்த மாதத்திற்கு பின்னர், எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கான பணத்தொகை இல்லை என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிடம் உதவி:
ஒவ்வொரு மாதமும் சுமார் 550 மில்லியன் டாலர்கள் எரிபொருளுக்கு மட்டுமே செலவாகுவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அதில் வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவு செலவு மட்டுமே 350 முதல் 400 மில்லியன் டாலர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருளுக்கான நிதி பற்றாக்குறை காரணமாக எரிபொருள் நெருக்கடி தொடரலாம் எனவும், இதற்கு சில நாடுகள் முன்வந்து உதவினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு கூறியிருப்பது, அவர்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது. இருந்த போதும் தொடர்ந்து இவ்வாறு நிதி கோருவது என்பது ஒரு கடினமான செயல் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவி கிடைத்தால், எரிபொருள் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளிடம் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை:
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான கலந்துரையாடல், ஒப்பந்தங்கள் இன்னும் இழுபறி நிலையிலேயே இருப்பதை செய்திகள் வழியாக நாம் அறிய முடிகிறது. ஆகவே இலங்கைக்கான நிதி உதவி என்பது இன்னும் தடைபட்ட நிலையிலேயே இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அடுத்த மாதம் நடுப்பகுதி வரையில் மக்களுக்கு குறைவின்றி எரிபொருட்களையும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் எந்த நிபந்தனைகள் இன்றி, இந்தியா மட்டுமே நிதி உதவி வழங்கி வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆகவே இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் உதவ முன்வந்தால் தங்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.