உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் ஈ கிடப்பதும், கரப்பான்பூச்சி கிடப்பதும் என பல செய்திகளைப் பார்த்திருப்போம் . ஆனால் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்த சம்பவம் துருக்கி நாட்டில் நடந்துள்ளது. கடந்த 21ம் தேதி சன் எக்ஸ்பிரஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று துருக்கியின் அன்காராவில் இருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்வ் நகருக்கு பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பயணியின் தட்டில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் இருந்துள்ளது. அதோடு சேர்ந்து வித்தியாசமான ஒரு டிஸும் இருந்துள்ளது. அது என்னவென்று பார்த்த பயணிக்கு ஷாக். அது ஒரு பாம்பின் தலை. துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை ஒன்று காய்கறியோடு சேர்ந்து இருந்துள்ளது. உடனடியாக அதனைப் படமெடுத்துக்கொண்ட பயணி இதுகுறித்து விமான நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து புகாரளித்துள்ளார். அந்த வீடியோவும் வைரலாகி பலரும் சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தை கிழித்து தொங்கவிட்டனர்.
உடனடியாக புகாருக்கு அறிக்கை விட்ட விமான நிறுவனம், விமானத்துறையில் நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலான பயணித்து வருகிறோம். 30 வருட அனுபவத்தில் விருந்தினர்களுக்கு தரமான சேவைகளையே வழங்கி வருகிறோம். எங்கள் பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இந்நிலையில் இப்படியான குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதனை எங்களால் இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் விசாரணையை தொடங்கியுள்ளோம். விசாரணைக்குப் பின் முறையான விளக்கமும், அறிக்கையும் அளிக்கப்படும். விசாரணை முடியும்வரை குறிப்பிட்ட கேட்டரிங் சர்வீஸ் ஒப்பந்தத்தை விமான நிறுவனம் நிறுத்தி வைக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
விமானத்தில் உணவு தொடர்பான சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் பசியால் அழுத 6 மாத குழந்தைக்கு இண்டிகோ விமான நிறுவனம் உணவு கொடுக்க மறுத்ததாக எழுந்த புகார் இணையவாசிகள் இடையே கடும் விமர்சனத்தைப் பெற்றது. இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எனது 6 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் போது எனது குழந்தை திடீரென பசியால் அழுதது. உடனடியாக விமான ஊழியர்களிடம் குழந்தைக்கு உணவு தருமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு பணம் கொடுக்கவும் தயார் எனவும் கூறினேன். ஆனால் விமான ஊழியர்களோ முதலில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு உணவை தந்து விட்டு தான் பின் மற்றவர்களுக்கு தருவோம் என கூறினர். எனது குழந்தை பசியால் அழுவதை அவர்கள் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார். இதனை கண்ட இணையவாசிகள் பலரும் இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.