மாறி வரும் காலநிலையால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஐநா சபையின் காலநிலை உச்சி மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில் “நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். மண் தான் நம்மை முழுமையாக ஒருங்கிணைக்கிறது. மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றத்தையும், மண் புத்துயிர் பெறுவதற்கான கொள்கைகளை செயல்படுத்துவதிலும் நம்பிக்கைத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்" என்று கூறினார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் காலநிலை அமைச்சர் மரியம் அல்மெய்ரி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.