விமானம்... இன்றும் பலருக்கு கனவு வாகனம். என்ன தான் விலை குறைப்பு செய்தாலும், அதில் பயணிக்கும் இலக்கை இன்னும் பலர் அடையவில்லை. அந்த அளவிற்கு பொருளாதாரம் மேம்படவும் இல்லை. அதனால் தான் இன்னும் மேலே பறக்கும் விமானத்தை ஆச்சரியத்துடன் பார்ப்போர் அதிகம் இங்கு உண்டு.


விமானம் ஏன் வியக்க வைக்கிறது... வானில் பறக்கும் விமானம், அளவில்லா ஆற்றல் படைத்தது என்கிற எண்ணம் பலரிடத்தில் இருக்கிறது. பஸ், கார், ரயிலை விட அதி வேகமாய் பறக்கும் ஆற்றல் விமானத்திற்கு உண்டு என்கிற நம்பிக்கை. அது என்னவோ உண்மை தான். ஆனால், உளு்ளூரில் உருண்டு ஓடும் ஆட்டோவிற்கு இருக்கும் ஆற்றல் சில நேரங்களில் விமானத்திற்கு இருப்பதில்லை.


ஆம்... நம்ம ஊரு ஆட்டோ... எதிரில் வரும் மனிதர்களை கூட இடித்துவிட்டு ஜம்முனு பாதையை கடக்கும், ஆனால் விமானங்கள் சிறு பறவை மோதினால் கூட சுக்குநூறாகும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். கேள்விபட்டிருப்போம்; சிலர் பார்த்திருப்பார்கள். பலர் அது அறிந்திருக்கவே மாட்டார்கள். அவர்களுக்கு இந்த வீடியோ அதிர்ச்சியளிக்கலாம்.




ஏ350-900 என்கிற விமானம் கடந்த அக்டோபர் 27 அன்று கொலம்பியாவின் பொகேட-எல்டோரடோ விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட்-பார்ஜஸ் அடோல்ஃபோ விமான நிலையத்திற்கு புறப்பட்டது. வழக்கம் போல பயணிகள் ஸ்பெயின் செல்லும் ஆசையில், விமானப்பணிப் பெண்கள் வழங்கிய மது உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்கி சுவைத்துக் கொண்டிருந்தனர். 


விமானம் புறப்பட்டு சரியாக 32வது நிமிடத்தில், விமானத்தில் பலமான ஒரு சத்தம். உள்ளே இருந்தவர்களுக்கு ஒரே பீதி. வழக்கம்போல , விமான கேப்டன்கள் ஒன்றுமில்லை என அவர்களை சமரசம் செய்கின்றனர். ஆனாலும் அவர்களுக்கு நடந்தது தெரியும். அடுத்த சில மணி நேரத்தில் விமான கட்டுப்பாட்டு அறைக்கு உதவி கோரப்பட்டு, ஸ்பெயின் விமான நிலையத்தில் அவசரமாகவிமானத்தை தரையிறங்க உதவி கோரப்பட்டது.


 






உடனே அனுமதி வழங்கப்பட்டு, தரையிறங்கிய விமானம், ஓடு பாதையில் வரும் போது, அதை பார்த்த பலருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. விமானத்தில் மூக்குப்பகுதி முழுவதும் சேதமடைந்திருந்தது. அந்த சேதத்திற்கு காரணமான கருப்பு கழுகு, அதனுள் சிக்கியிருந்தது. ஆம், ஸ்பெயின் நாட்டின் மிக கனமான பறவையாக கருதப்படும் கருப்பு கழுகு, விமானத்தில் மோதியதும், அதனால் விமானம் சேதமடைந்ததும் தெரியவந்தது. 


விமானத்தின் வேகம், பறவையின் வேகமும் சேர்ந்ததால் அந்த கொடூர விபத்தில் கழுகின் உடல் சிதறியது. விமானத்தின் முகப்பு முழுவதும் அதன் ரத்தம் சிதறியிருந்தது. ஒரு கழுகு மோதி உடையும் அளவிற்கு விமானம் பழையதா... என்று நினைக்க வேண்டாம். கடந்த 2019 மே மாதத்தில் தான் இந்த விமானம் பயன்பாட்டிற்கு வந்தது. புதிய விமானம் தான், ஆனால் கழுகு அதை விட பலமானதாக இருந்திருக்கிறது. ‛பறவையை கண்டான் விமானம் படைத்தான்....’ என சிவாஜி பாடல் ஒன்று உள்ளது. ‛பறவையை கொன்றான்.... விமானம் உடைத்தான்...’ என ஸ்பெயினுக்கு அதை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.