பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தீபத் திருவிழாவையொட்டி கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் பிடாரி அம்மன் உற்சவம் அண்ணாமலையார் கோவிலின் 5ஆம் பிரகாரத்தில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி அண்ணாமலையார் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் திருக்கோவிலில் பிடாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், அபிஷேகதூள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனைகள் செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அண்ணாமலையார்‌ கோவிலில் பக்தர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.




 


மேலும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வரும் பிடாரியம்மன் உற்சவம் கொரோனா தொற்றால் பக்தர்களை அதிக அளவு அனுமதிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.இதனால் அண்ணாமலையார் கோயிலின் 5 ஆம் பிரகாரத்தில் கோயில் ஊழியர்கள் பிடாரி அம்மனை சுமந்தவாறு தொடர்ந்து இரண்டாம் முறையாக ஐந்தாம் பிரகாரத்தில் உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன்பிறகு, 10 நாட்கள் சுவாமிகளின் உற்சவம் நடைபெறும். கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5 ஆம் பிரகாரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெறும். மாட வீதியில் நடைபெறும் உற்சவம் மற்றும் மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.




விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக, மகாதீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் கொடுக்க உள்ளார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சி கொடுப்பதால் மூலவர் சன்னதி அடைக்கப்படும். பின்னர் மறுநாள், மூலவர் சன்னதி திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.



இதையடுத்து, கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவமானது இந்தாண்டும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தெப்பல் உற்சவத்தை தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம் வரும் 23 ஆம் தேதி நடந்ததும் விழா நிறைவடையும். தற்போது கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக கோயிலுக்குள் கோவிலின் கட்டளை தாரர்கள் மற்றும்  உபயதாரர்கள் எனவும்  கோவிலில் குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாளை இரவு 9 ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோவிலின் முதற்கண் கடவுளான விநாயக பெருமான் உற்சவம் நடைபெற உள்ளது.