Spain King: ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மன்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது பொதுமக்கள் முட்டை மற்றும் சேற்றை வீசினர்.


வெள்ளத்தால் தவிக்கும் ஸ்பெயின் மக்கள்:


கடந்த செவ்வாயன்று ஸ்பெயின் நாட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன. சேறும், சகதியுடனும் தெருக்களில் ஓடிய வெள்ள நீரால் குடியிருப்புகள் சூழப்பட்டன. வலென்சியா பகுதியில் மட்டும் குறைந்தது 210 பேர் உயிரிழந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும், உயரலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், அரசாங்கம் துரித கதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு நிலவுகிறது.









மன்னர் மீது முட்டை, சேற்றை வீசிய பொதுமக்கள்:


இந்நிலையில் தான் ஸ்பெயினின் மன்னர் ஆறாம் ஃபிலிப், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பைபோர்டா பகுதிக்கு ராணி லெடிசியா மற்றும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்களை சூழ்ந்து புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த உள்ளூர் மக்கள், ராஜா, ராணி மற்றும் பிரதம மந்தி மீது முட்டை மற்றும் சேற்றை வீசியுள்ளனர். ”கொலைகாரர்களே, வெளியேறுங்கள்” என்ற முழக்கத்தையும் எழுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதையடுத்து காவலர்கள் உதவியுடன் அங்கிருந்து வெளியேறிய ராஜா உள்ளிட்டோர், ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஆய்வு பணிகளையும் குறைத்துக் கொண்டனர். இதனிடையே, மன்னர் மீது பொதுமக்கள் சேற்றை வீசிய வீடியோம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.









கொதிப்பில் மக்கள்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த நகரத்தில் பொதுமக்களிடையே விரக்தி அதிகரித்து வருகிறது.  குடியிருப்பாளர்களுக்கும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கும்  தாமாக முன்வந்து, மீட்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அரசு மந்தகதியில் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.


பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் சனிக்கிழமையன்று 10,000 ராணுவ மற்றும் சட்ட அமலாக்கப் பணியாளர்களை வலென்சியாவில் வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக அனுப்பினார். இது ஸ்பெயினின் மிகப்பெரிய அமைதிக்கால நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் அந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பதன் விளைவாகவே, ஆய்வு மேற்கொள்ள வந்த மன்னர் மீது முட்டை மற்றும் சேறு வீசும் சம்பவம் அரங்கேறியுள்ளது.