US President Salary: அமெரிக்காவின் அதிபர் பதவி வகிப்பவருக்கு, வழங்கப்படும் ஊதியம் உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


அமெரிக்க அதிபர் தேர்தல்:


அமெரிக்க அதிபர் தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களில், புதிய அதிபராக வெற்றி பெறப்போவது யார் என்பது தொடர்பான முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. புதிய அதிபர் உலகின் தவிர்க்கமுடியாத தலைவராக மாறினாலும், அவர் அந்நாட்டு அரசாங்கத்தின் ஊழியர் என்பதே அடிப்படை. அதன் காரணமாக அவரும் அரசிடம் இருந்து ஊதியம் பெறுவார். என்வே, அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் பற்றி இங்கே அறியலாம்.


அமெரிக்க அதிபரின் ஊதியம்:


ஒரு சாதாரண அமெரிக்கர் ஆண்டுக்கு சராசரியாக $44,500 (ரூ 37.41 லட்சம்) சம்பாதிக்கிறார். அதேநேரம், அந்நாட்டு அதிபருக்கு ஆண்டுக்கு $400,000 (ரூ 3.36 கோடி) ஊதியமாக வழங்கப்படுகிறது. தரவுகளின்படி, அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் $50,000 (ரூ. 42 லட்சம்) செலவுக் கொடுப்பனவும், $100,000 (ரூ. 84 லட்சம்) வரி செலுத்தாத பயணக் கணக்கு மற்றும் $19,000 (ரூ. 16 லட்சம்) பொழுதுபோக்குக்கு கொடுப்பனவையும் கூடுதலாக பெறுகிறார். மொத்தத்தில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபரின் மொத்த செலவு $569,000 (ரூ 4.78 கோடி) ஆகும். அமெரிக்க சட்டத்தின்படி, $50,000 செலவு கொடுப்பனவிலிருந்து பயன்படுத்தப்படாத எந்தத் தொகையும் கருவூலத்திற்குத் திரும்ப வேண்டும்.


மேலும், புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் வெள்ளை மாளிகையை மீண்டும் அலங்கரிக்க $100,000 வழங்கப்படும். இருப்பினும், பராக் ஒபாமா போன்ற பல அதிபர்கள் அந்த பணத்தைப் பயன்படுத்தாமல் சொந்த நிதியைப் பயன்படுத்துகின்றனர். கூடுதலாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு கூடுதல் கொடுப்பனவு, பயண கொடுப்பனவு, பொழுதுபோக்கு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் போன்ற பிற சலுகைகளும் வழங்கப்படுகிறது. 


அமெரிக்க அதிபருக்கான இதர சலுகைகள்:


சம்பளம் தவிர, அமெரிக்க அதிபருக்கு லிமோசின், தி பீஸ்ட், மரைன் ஒன் மற்றும் ஏர் ஃபோர்ஸ் ஒன் ஆகியவற்றில் இலவச போக்குவரத்து மற்றும் வெள்ளை மாளிகையில் இலவச தங்குமிடம் கிடைக்கிறது. அமெரிக்க அதிபர் அனுபவிக்கும் மற்றொரு சலுகை ஆண்டு ஓய்வூதியம் சுமார் $200,000 (ரூ. 1.68 கோடி), அத்துடன் சுகாதார பாதுகாப்பு மற்றும் உத்தியோகபூர்வ பயணத்திற்கான கட்டணமும் வழங்கப்படுகிறது. இதனிடையே கடந்த 24 ஆண்டுகளாக அமெரிக்க அதிபரின் ஊதியம் உயர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதிபர்கள் ஊதியத்தை நிராகரிக்கலாமா?


சட்டப்படி, அமெரிக்க அதிபர்கள் தங்கள் சம்பளத்தை நிராகரிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தங்களது ஊதியத்தை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்கலாம்.


அதிக ஊதியம் வாங்கும் தலைவர்கள்:


1. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைவர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் -  ஆண்டு சம்பளம் கிட்டத்தட்ட $1.69 மில்லியன் (ரூ 14.20 கோடி)


2. ஹாங்காங்கின் ஜான் லீ கா-சியூ -  ஆண்டுக்கு சுமார் $672,000 (ரூ 5.64 கோடி) சம்பாதிக்கிறார்


3. சுவிட்சர்லாந்தின் அதிபதி வயோலா அம்ஹெர்ட் -  ஆண்டுக்கு $570,000 (ரூ. 4.8 கோடி) சம்பாதிக்கிறார்


4. ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் - ஆண்டுக்கு கிட்டத்தட்ட $550,000 (ரூ. 4.62 கோடி) சம்பாதிக்கிறார்


பிரதமர் மோடியின் ஊதியம்:


இந்தியாவின் தற்போதைய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளம் பெறுகிறார். இதில் நாடளுமன்ற அலவன்ஸ் ரூ.45,000, செலவு கொடுப்பனவு ரூ.3,000, தினசரி கொடுப்பனவு ரூ.2,000, அடிப்படை ஊதியம் ரூ.50,000 ஆகியவை அடங்கும்.