மல்லோர்கா தீவு:
உலகின் அதிக சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது மல்லோர்கா தீவு. இது ஸ்பெயினின் கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு மத்தியதரைக் கடலின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த தீவில் பண்டைய கலாச்சாரம் மற்றும் வரலாற்றினை இப்போதும் பேணிகாத்து வருகின்றனர். கடலின் அழகியலுடன் அருமையான உணவும் , கூடவே சாகச விளையாட்டுகளும்தான் பயணிகளை வெகுவாக கவர காரணமாக இருக்கிறது.
அத்துமீறும் போதை ஆசாமிகள் :
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் தற்போது சுற்றுலா பயணிகளை அனுமதித்து வருகின்றனர். அந்த வகையில் மல்லோர்கா தீவிற்கு ஏகப்பட்ட பயணிகள் படையெடுக்கின்றனர். குறிப்பாக இளசுகள். மதுப்பிரியர்களுக்கும் இது சரியான இடமாக இருப்பதால் அவ்வபோது சிலர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவது, சக பயணிகளிடம் அத்துமீறும் சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஒரு சில சுற்றுலாப் பயணிகள் காலை 10 மணியளவில் ஹோட்டல்களுக்கு வருவதையும், மதியம் 2 மணிக்குள் அவர்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடிபோதையில் இருப்பதாகவும் ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்களை உடன் வந்த நண்பர்கள் ஓட்டல் நடைபாதையிலேயே விட்டு விட்டுச்சென்றுவிடுவதாகவும் கூறுகின்றனர்.இது குடும்பத்துடன் மல்லோர்கா வரும் பயணிகளுக்கு மிகுந்த சங்கடங்களை ஏற்படுத்துவதால் , அங்கிருக்கும் சில உணவகங்கள் குடிபோதையில் இருப்பவர்களை தவிர்க்க புதிய யுக்தியை கையாண்டுள்ளன.
புதிய யுக்தி :
அங்குள்ள சில உணவகங்கள் தங்கள் கடைகளுக்கு வருவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது மேல் ஆடைகள் இன்றி, கால்பந்து ஜெர்ஸி அணிந்த இளைஞர்கள் இனிமேல் உணவகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் அப்படி அணிந்து வரும் நபர் உணவகங்களுக்குள் நுழைய குளித்துவிட்டு ஆடைகளை மாற்ற வேண்டும்.ஏனென்றால் கடற்கறையில் சுற்றித்திறியும் பெரும்பாலான குடிகாரர்கள் இப்படியான தோற்றத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இது குறித்து பேசிய மல்லோர்கா தீவில் உள்ள பால்மா பீச்சின் தலைமை நிர்வாக அதிகாரி, ஜுவான் மிகுவல் ஃபெரர், தி கார்டியன் பத்திரிக்கையிடம் தெரிவிக்கையில் “ கடலின் அழகையும் , பழமையையும் ஆராய்வதற்கு பதிலாக இங்கு குடிப்பதற்கென்றே சில வந்து எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றனர்.கடந்த மே 10 ஆம் தேதி முதல் குடிபோதையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடற்கரையில் அதிகரித்துள்ளது. “ என்றார்.
கடுமையாக்கப்பட்ட சட்டம் :
முன்னதாக கடந்த 2020-ஆம் ஆண்டில் ஸ்பெயின் அரசு , இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தீவில் கடுமையான சட்டத்தை இயற்றியது. அதன் அடிப்படையில் ஹாப்பி ஹவர்ஸ் , இலவச பார்கள் ,மது இரண்டுக்கு ஒன்று , பப் குறித்த விளம்பர பலகைகளை வைப்பது உள்ளிட்ட சில விஷயங்களை தடை செய்தது.மேலும் மதுபானங்களை விற்கும் கடைகளை இரவு 9.30 மணி முதல் காலை 8 மணி வரை மூட வேண்டும் அல்லது €600,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கடை மூடப்படும் என்றும் அறிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.