Nasa : கடலுக்கு மேல் சுற்றி வரும் விநோத மேகம்.. நாசா சொல்வது என்ன?
நாசா அமைப்பின் Moderate Resolution Imaging Spectroradiometer என்ற கருவி பூமியின் மிகப்பெரிய உள்நாட்டு நீர்நிலையான காஸ்பியன் கடலின் மீது விசித்திரமான வடிவம் கொண்ட மேகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

நாசா அமைப்பின் `மாடிஸ்’ என்றழைக்கப்படும் Moderate Resolution Imaging Spectroradiometer என்ற கருவி பூமியின் மிகப்பெரிய உள்நாட்டு நீர்நிலையான காஸ்பியன் கடலின் மீது விசித்திரமான வடிவம் கொண்ட மேகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
வழக்கமாக, மேகத்தின் முனைகள் பரவியிருப்பதாக இருக்கும் நிலையில், இந்தக் குறிப்பிட்ட மேகத்தின் முனைகள் கூர்மையாக இருந்ததோடு, வரைந்து வைத்த ஓவியத்தைப் போல `G' என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் தோன்றியுள்ளது.
Just In



நெதர்லாந்து விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாஸ்டியான் வான் டைடென்ஹோவன் என்பவர் இந்த மேகம் சிறியளவிலான ஸ்ட்ரேட்டோகுமுலஸ் வகை மேகம் எனத் தெரிவித்துள்ளார்.
நல்ல வானிலை சூழலில் சுமார் 600 முதல் 2 ஆயிரம் அடிகள் வரையிலான உயரத்தில் வழக்கமாக காலிஃப்ளவர் வடிவத்தில் இருக்கும் தொடர்ச்சியற்ற மேகங்கள் குமுலஸ் மேகங்கள் என்று அழைக்கப்படும். இவற்றில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் ஸ்ட்ரேட்டோகுமுலஸ் மேகங்கள் தோன்றுகின்றன. இந்த மேகத்தின் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருப்பதோடு, பலராலும் பல முறை பகிரப்பட்டுள்ளது.

மேலும், இந்த மேகங்கள் குறித்து பேசியுள்ள ஆய்வாளர் பாஸ்டியான் வான் டைடென்ஹோவன், `நிலத்தில் இருந்து வரும் சூடான காற்றும், கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றும் மோதிக் கொள்ளும் போது, மேகம் அதன் எல்லையில் இருப்பதால் கூர்மையான முனைகள் உருவாகின்றன. இவை ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையில் அதிகம் தோன்றினாலும், அளவில் பெரிதாக இருப்பதில்லை’ எனக் கூறியுள்ளார்.
இந்த மேகம் காஸ்பியன் கடலில் இருந்து மகச்கலா கரையை நண்பகலில் அடைந்ததால் நிலப்பரப்பிற்குள் நுழைவதற்கு முன்பே கரைந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் இதே போன்ற மற்றொரு நிகழ்வில் நாசா விஞ்ஞானிகள் ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, White Dwarf என்ற நட்சத்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இறந்த நட்சத்திரமான இது அதன் கோள்கள் அனைத்தையும் அழித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.