சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாலத்தீவில் உள்ள தேசிய மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், இந்தியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திடீரென மைதானத்தின் வெளியே குவிந்த ஒரு தரப்பினர், யோகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். யோகா தங்கள் தரப்பு வழிபாட்டு முறைக்கு எதிரானது என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 




அப்போது, அங்கு திரண்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்தனர். தடுப்புகளை மீறி மைதானத்திற்கு உள்ளே நுழைந்த ஆர்பாட்டக்காரர்கள், மைதானத்தில் யோகா செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கூச்சலிட்டனர். அப்போதும் அங்கு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், சில நிமிடங்களில் போலீசாரின் தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ஆர்பாட்டக்காரர்கள், அங்கிருந்த இந்திய தேசியக் கொடிகளை பிடுங்கி எறிந்து, யோகா செய்து கொண்டிருந்தவர்களை அடித்து துரத்தினர். 




இதனால் , அமைதியாக இருந்த அந்த மைதானம், திடீரென களேபரம் ஆனது. உலக யோகா தினத்தன்று நடந்து இந்த அசம்பாவித சம்பவத்திற்கு இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து , உடனடியாக இந்த விவகாரம் குறித்து பதிலளித்த மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமத் ஷொலி, இந்த விவகாரத்தை முக்கியத்துவத்துடன் அணுகி, விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 






இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை மாலத்தீவு போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


‛‛தேசிய மைதானத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக உயர் முன்னுரிமை விசாரணையை ஆரம்பித்துள்ளது.  வன்முறையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு, உடைமைகளை அழித்து, நிகழ்வில் பங்கேற்பவர்களைத் தாக்க முயற்சிப்பதன் மூலம் அச்சத்தைத் தூண்ட முயன்றுள்ளனர்.  இந்நிகழ்வில் சர்வதேச இராஜதந்திரிகள் , அரச உயரதிகாரிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர் .  குற்றப் புலனாய்வுக் கட்டளையின் தீவிரமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து மிக அவசரமாக விசாரணை நடத்தி வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மாலத்தீவுகளின் முற்போக்குக் கட்சியின் (PPM) அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியதாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.  இந்த வழக்கில் இதுவரை 6 ஆண் மாலத்தீவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கூடுதலாக, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் பதிலின் உள் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.  எங்கள் முழு சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறோம்,’’






என்று அந்த அறிக்கையில் மாலத்தீவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


ட்விட்டரில் ஆதாரங்களை திரட்டிய மாலத்தீவு போலீஸ்






 


மாலத்தீவு மைதானத்தில் நடந்த நிகழ்வு குறித்து அந்நாட்டு அதிபர் கட்டளையிட்டதும், தனது ட்விட்டர் பக்கத்தில் மாலத்தீவு போலீசார் ஒரு பதிவை வெளியிட்டனர். அச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் ஆதாரம் இருந்தாலும் அனுப்பி உதவுமாறு அதில் கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில், மாலத்தீவு போலீசாருக்கு அவர்களது ட்விட்டரில், நிறைய வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனுப்பினர். அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.