ஒரு சில நேரங்களில் காவல்துறையினருக்கு வரும் போலி வெடிகுண்டு தொடர்பான மிரட்டல்கள் பெருமளவில் பதற்றத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் ஒரு 18 வயது நபர் ஒருவர் செய்த குறுஞ்செய்தி காவல்துறையினர் உட்பட பலரையும் பதற்றப்படுத்தியுள்ளது. குறிப்பாக விமானம் ஒன்றை அவசரமாக தரையிறங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. 


ஸ்பெயின் நாட்டில் 18 வயதான ஆதித்யா வெர்மா என்ற நபர் செஸ் விளையாட்டு வீரராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது இவர் தன்னுடைய நண்பர்களுக்கு ஸ்நாப்சாட்டில் ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் ஒரு விமானத்தில் இருக்கிறேன். நான் இந்த விமானத்தை தற்போது வெடிக்க வைக்க போகிறேன். நான் ஒரு தாலிபான்” என அனுப்பியுள்ளார். 


இந்தக் குறுஞ்செய்தியை காவல்துறையினர் பார்த்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். எனினும் அதற்குள் விமானம் கிளம்பியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் பயணிப்பவர்களின் பட்டியலில் ஆதித்யா வெர்மாவின் பெயர் உள்ளதா என்று பார்த்துள்ளனர். அவருடைய பெயர் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு ஜெட் விமானத்துடன் சென்று வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தை அவசர அவசரமாக ஒரு தீவில் தரையிறக்க வைத்துள்ளனர். 




அதன்பின்னர் அந்த விமானத்தில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகள் தன்னுடைய குறுஞ்செய்தியை பார்த்து சோதனை நடத்துகின்றனர் என்பதை ஆதித்யா வெர்மா உணர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அதிகாரிகளிடம் என்னை மன்னித்துவிடுங்கள் நான் சும்மா இந்த குறுஞ்செய்தியை அனுப்பினேன் எனக் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஏற்கெனவே கடந்த சில நாட்களாக விமானங்கள் பல பிரச்னைகள் காரணமாக தரையிறங்கும் செய்திகள் வந்துள்ளன. இந்த சமயத்தில் இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் எமிரேட்ஸ் விமானம் ஒன்று வானில் பறக்கும் போது ஏற்பட்ட கோளாறு உடன் சுமார் 14 மணிநேரம் பறந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்குபின்பு இதுபோன்று போலி வெடி குண்டு மிரட்டல் காரணமாக ஒரு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண