விண்வெளிக்கு செல்ல பயன்படும் செயற்கைகோள் ஏவுகணைகளை தயாரிக்கும் பிரபல தனியார் நிறுவனம் Space X. இந்த நிறுவனத்தின் சிஇஒ எலோன் மஸ்க். இந்த நிறுவனம் சார்பில் 2022-ஆம் ஆண்டு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அந்நிறுவனம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்தப் பயணம் தொடர்பாக அவ்வப்போது எலோன் மஸ்க் பல தகவல்களை வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில் தற்போது இந்தப் பயணத்திற்கு தேவையான ஏவுகணை தயாரிப்பு உள்ளிட்டவை கிரிப்டோகரன்சி மூலம் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "ஸ்பேஸ்எக்ஸ் அடுத்த ஆண்டு டாஜ்-1 என்ற செயற்கைகோளை ஏவவுள்ளது.  இந்த பயணத்திற்கான மொத்த செலவும் டாக்காயின் கிரிப்டோ கரன்சி பயன்படுத்தப்பட உள்ளது. விண்வெளி தொடர்பான முதல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இதுவாகும்" எனப் பதிவிட்டுள்ளார். 


 






இந்த மொத்த பயணத்திற்கும் எவ்வளவு செலவு என்று இன்னும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் துணை தலைவர், "இந்த செயற்கைகோள் பயணத்தின் மூலம் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை உலகத்தை தாண்டி விண்வெளிக்கு எடுத்துச்செல்கிறோம். இது ஒரு புதிய விதமான பரிவர்த்தனையின் தொடக்கமாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார். 




முன்னதாக எலோன் மஸ்க் கிரிப்டோகரன்சி தொடர்பாக அவ்வப்போது ட்விட்டரில் பதிவுகளை இட்டு வந்தார். அதிலும் குறிப்பாக டாக்காயின் தொடர்பாக இவர் இட்ட பதிவுகள் அந்த பிட்காயின் மிகவும் பிரபலம் அடைந்தது. குறிப்பாக இவர் தன்னுடைய மின்சார கார்களை வாங்க டாக்காயின் ஏற்று கொள்ளப்படும் எனப் பதிவிட்டிருந்தார். அதன்பின்னர் டாக்காயினின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. தற்போது உலகளவில் பிட்காயின்கள் வரிசையில் 4-வது இடத்தில் டாக்காயின் உள்ளது. இதன் மொத்த சந்தை மதிப்பு 73 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் ஒரு டாக்காயின் மதிப்பு $0.73 ஆக உள்ளது. 


முதல்முறையாக நிலவுக்கு பிட்காயின் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை கிரிப்டோகரன்சிக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கிரிப்டோகரன்சி அதிகளவில் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.