தென் கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிச சக்திகளுக்கு எதிராக நாட்டை பாதுகாக்கும் நோக்கில் அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார். 


தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றிய அதிபர் யூன் சுக் இயோல், "தாராளவாத கொள்கைகளை பின்பற்றும் தென் கொரியாவை வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரநிலை ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன்.


தென் கொரியாவில் பரபரப்பு:


மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், குற்றச்சாட்டுகளில் இருந்து சிறப்பு விசாரணையில் இருந்தும்  சட்டத்தில் இருந்தும் தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே எதிர்க்கட்சி ஆட்சியை முடக்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்.


அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு இருந்து வருகிறது. கணிசமாக குறைக்கப்பட்ட நிதிநிலை திட்டத்திற்கே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற குழு மூலம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தனர்.


ஸ்கெட்ச் போட்ட கம்யூனிஸ்டுகள்:


இப்படிப்பட்ட சூழலில், தென் கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்திய அதிபர், "நமது தேசிய நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சட்டமியற்றும் சர்வாதிகாரத்தின் குகையாகவும் மாறியுள்ளது.


இது நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி நமது தாராளவாத ஜனநாயக ஒழுங்கை கவிழ்க்க முயல்கிறது. போதைப்பொருள் குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், பொதுப் பாதுகாப்பைப் பேணுதல் போன்ற தேசத்தின் முக்கியப் பணிகளுக்குத் தேவையான வரவு செலவுத் திட்டங்களுக்கு நிதியை குறைத்து நாட்டை போதைப்பொருள் புகலிடமாகவும், நாட்டில் குழப்பமான நிலையை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர். கூடிய விரைவில் தேச விரோத சக்திகளை ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன்" என தெரிவித்துள்ளார்.


இதையும் படிக்க: Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?