தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஆபத்தான நிலையில் வீழ்ந்து வரும் நிலையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2021ல் 0.81 ஆக இருந்த பிறப்புகள், கடந்த ஆண்டு ஒரு பெண்ணுக்கு 0.78 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு சதவிகிதம் கொண்ட நாடாக உள்ளது தென் கொரியா. அந்த நிலை தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் தென் கொரியாவின் மக்கள்தொகை இப்போது இருப்பதை விட பாதிக்கும் குறைவாக மாறும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒப்பீட்டளவில் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட நாடுகளும் கூட, ஆசிய தேசத்தை விட இன்னும் உயர்ந்த இடத்தில் உள்ளன. ஸ்பெயினில் ஒரு பெண்ணுக்கு 1.23 பிறப்புகளும், இத்தாலி 1.24 மற்றும் ஜப்பான் 1.34 சதவிகித பிறப்புகளும் கொண்டுள்ளன. நிலையான மக்கள்தொகையை பராமரிக்க, விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



குழந்தை பெற்றுக்கொள்ள தடை என்ன?


தென் கொரியர்களுக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பதற்காக புதிய நடவடிக்கைகளை முன்வைத்து, "அவசர மனப்பான்மைக்கு" அழைப்பு விடுக்கும் நிலைக்கு, ஜனாதிபதி யூன் சுக் இயோல் தள்ளப்பட்டுள்ளார். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள தடையாக உள்ள விஷயங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை சரி செய்துகொண்டு இருக்கின்றனர். அதன் மூலம் முக்கிய காரணிகளாக அவர்கள் கருதுவது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் செலவாகும் விஷயமாக உள்ளது என்பதுதான்.


தொடர்புடைய செய்திகள்: UPI Transaction : வருகிறது ஆப்பு: திணறவைக்கும் டிஜிட்டல் இந்தியா: ஏப்ரல் 1 முதல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்...


ஒரு மாதத்திற்கு ரூ.63,000


இந்த நிலையில், ஜனாதிபதி யூன் தனது அரசாங்கம் ஒரு வயதிருக்கும் குறைவான குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருக்கும் மாதாந்திர கொடுப்பனவை கணிசமாக உயர்த்துவதாக அறிவித்தார். ஏற்கனவே 3,00,000 (சுமார் ரூ. 19,000) வோனில் இருந்த அந்த தொகை தற்போது 7,00,000 (சுமார் ரூ.44,000) வோன் வரை உயர்த்தப்பட்டு இரட்டிப்பாகும். மேலும் 2024 இல் மற்றொரு உயர்வாக 1 மில்லியன் வோன் வரை கொண்டு வர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, சுமாராக 63,000 இந்திய ரூபாய் அளவிற்கு உயர்த்த உள்ளனர். டிசம்பர் 2022 நிலவரப்படி தென் கொரியாவில் சராசரி மாதச் சம்பளம் ரூ.2,80,000 ஆக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



கொடுப்பனவுகள் மட்டுமே நடவடிக்கையா?


இந்த நடவடிக்கையின் மூலம், நாட்டின் பிறப்பு விகிதம் உயர்ந்து மிகப்பெரிய முதலீட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளில், கருவுறுதல் தொடர்ந்து சரிவை சந்தித்துக் கொண்டிருப்பதால், தென் கொரியா 200 பில்லியன் டாலர்கள் வரை இதற்கு செலவழித்துள்ளது. இதுமட்டும் வழியாகாது என்றும், மக்கள் குழந்தைகளைப் பெறுவதைத் தடுக்கும் பிற காரணிகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஒப்புக்கொண்ட யூன், குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், புதுமணத் தம்பதிகளுக்கு வீட்டுவசதி வழங்குதல் மற்றும் சிறு குழந்தைகளுக்கான சுகாதாரச் செலவுகளைக் குறைத்தல் போன்ற திட்டங்களையும் குறித்து விவாதித்தார். ஆனால் கல்வியில் தொடங்கி, பிற செலவுகள் வரை வயதாகும்போது குழந்தைகளுக்கு ஆதரவளிக்க அதிக ஊக்கத்தொகை தேவைப்படும் நிலையில் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தென் கொரியாவில் வருமானத்துடன் ஒப்பிடும்போது உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கல்வி முறை உள்ளது குறிப்பிடத்தக்கது.