போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






போப் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சில நாட்கள் இருக்க  வேண்டும் என்று வாட்டிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, போப்பாண்டவர் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.  


"போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரின் பிரார்த்தனைக்கு நன்றிகள்" என வாட்டிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவில் பாதிரியாராக பயிற்சி மேற்கொண்ட போது நுரையீரல் தொற்று காரணமாக ஒரு பகுதி நுரையீரல் அகற்றப்பட்டதையடுத்து அவருக்கு அவ்வப்போது சுவாச பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.  குருத்தோலை ஞாயிறு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர் அதில் கலந்துக்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  


போப் பிரான்சிஸ்ஸிற்கு ஏற்கனவே பெருங்குடல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. முழங்காலில் நாள்பட்ட வலியின் காரணமாக அவர் சக்கர நாற்காலி அல்லது வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை போப் பிரான்சிஸ் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். அதேசமயம் அவர் நேற்று காலையில் செயிண்ட் பீட்ட்ர்ஸில் பார்வையாளர்களை சந்தித்த போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக வாட்டிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.