தென்கொரியாவில் தற்கொலை செய்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் தென்கொரியா முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டே தென்கொரியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதில் கொரோனா பெருந்தொற்றும் , அதனால் மக்கள் சந்தித்த பொருளாதார சிக்கல்களும் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்றால் மிகையில்லை. தற்போது சுமார் 13,300 கொரியர்கள் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்வதாக அதாவது 100,000 பேரில் 26 பேர் தற்கொலை செய்துக்கொள்வதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவு தெரிவிக்கிறது.


கடந்த 2020 ஆண்டில் 25.7 ஆக இருந்த தற்கொலை விகிதம் தற்போது அதிகரித்துள்ளது.பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நாடுகளுக்கான அமைப்பில் மிக அதிகமாக இருந்தது.




கொரியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸ் ஆய்வாளரான சாங் மின்-கீ கருத்துப்படி, ”நேரம் சரியாக ஒத்துப்போகாவிட்டாலும், பொருளாதாரம் மோசமாக செயல்படும்போது தற்கொலைகள் அதிகரிக்கும். கடந்த ஆண்டு கொரோனா மற்றும் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வந்தாலும், ஒரு கட்டத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துவிட்டது .1999-க்குப் பிறகு வேலையின்மை மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது என்றார்.கொரியாவில் இந்த ஆண்டு பொருளாதார சரிவு பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன, மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், குடும்பம் மற்றும் வணிக நிதிகள் மேலும் அழுத்தத்தின் கீழ் வருகின்றன.கொரியர்கள் தற்கொலை செய்துக்கொள்வதற்கு பள்ளி மற்றும் வேலையில் அழுத்தம், மனச்சோர்வுக்கான உதவியை நாடுவதில் அவமானம் மற்றும் வயதானவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாமை போன்ற காரணங்களும் அடங்கும்” என்கின்றனர் நிபுணர்கள்.







முன்னதாக தென்கொரியாவில் எதிர்கால சந்ததிகள் குறித்த அச்சம் நிலவியது. காரணம் அங்கு பெண்கள் கருவுருதல் வெகுவாக குறைந்து போனது. 50 வருடங்களுக்கு முன்னதாக 10 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில் , சமீபத்திய ஆய்வறிக்கை அது  2001-ஆம் ஆண்டில் 5 லட்சமாக இருப்பதாக கூறியது. தற்போதைய காலக்கட்டத்தில் அது இன்னும் குறைந்து 2.60 லட்சமாகிவிட்டது. இது தனிப்பட்ட மனிதர்களில் கொள்கை மற்றும் பொருளாதார சிக்கல்கள் சார்ந்தே அமைகிறது. இந்த நிலையில் குழந்தை பெறுவதை ஊக்குவிக்க அந்த நாடு குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்கு மாதம் 60 ஆயிரம் ரூபாயும் , அதன் பிறகு அதில் பாதி தொகை வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.