தென் ஆப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. கேப்டவுன் நகரவாசிகள் நூற்றுக் கணக்கானோர் திரண்டு காவல்நிலையத்தை முற்றுகையிட இச்சம்பவம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.


கேப்டவுனில் உள்ள ரைலாண்ட்ஸ் ப்ரமைரி பள்ளியில் படித்துவந்தார் அபிரா தேக்தா. இவர் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி  பள்ளியின் வாகனத்தில் ஏறுவதற்காக காத்திருந்த போது யாரோ அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே அபிராவின் பெற்றோர் போலீஸில் புகார் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை காவல்துறை இதில் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறது என்பதே பெற்றோர் மற்றும் அவர் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களின் புகார்.


இதனால் இன்று கேப் டவுனின் காட்ஸ்வில்லே பகுதியை சேர்ந்த மக்கள் பேரணி நடத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இந்தப் பேரணியில் அபிராவின் பெற்றோரும் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க இயலாத நிலையிலெயே இருந்தனர். அவர்கள் சார்பில் பேசிய நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களாகவே அபிராவின் பெற்றோர் சரிவர சாப்பிடுவதில்லை, தூங்குவதும் இல்லை. அபிராவின் தந்தை ஒரு மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். குழந்தையைக் காணாமல் இருவரும் விரக்தியில் உள்ளனர். ஆனால் குழந்தை காணாமல் போய் 10 நாட்களாகியும் போலீஸார் எந்த பொறுப்பான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்றார். அபிராவை விடுவிக்க ஏதேனும் பிணைத் தொகை கேட்கப்பட்டதாக என்ற தகவலும் இல்லை.


ஆப்ரிக்க நாடுகளும் குழந்தை கடத்தல்களும்


ஆப்ரிக்கா கண்டத்தின் நைஜீரியா தான் குழந்தைக் கடத்தலுக்கு மிகவும் பெயர் போனது. நைஜீரியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குழந்தைகளை கடத்திச் செல்லும் கொள்ளைக் கும்பல் பெற்றோரிடம் பெருந் தொகையை பிணைத் தொகையாகப் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விடுவிக்கிறது. சில குழந்தைகள் கொள்ளையர்கள் பிடியில் இறந்துவிடுகின்றனர். சில குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.


நைஜீரியாவில் குழந்தைக் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணம் நைஜீரியா முழுவதுமே விரவிக் கிடக்கும் கொள்ளையர்கள். இவர்கள் குழந்தைகளைக் கடத்தி பிணைத் தொகையாகப் பெறும் பணத்தின் மூலம் பிழைக்கின்றனர். இவர்களுக்கு போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு.


இந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் நாட்டில் இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்களுக்கு ஒற்றைத் தலைமை என்று ஏதுமில்லை. இருந்தாலும், அல் கொய்தா போன்ற பாங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதால் காரியம் சாதித்துக் கொள்கின்றனர். இந்த இயக்கத்துக்கு கடத்தப்படும் குழந்தைகளை கொள்ளைக் கும்பல் விற்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. 


கடந்த நவம்பர் முதல் வாரத்தில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியான கட்சினா மாநிலத்தில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து துப்பாக்கி ஏந்திய நபர்களால் கடத்தப்பட்ட 21 குழந்தைகள் அடங்கிய குழு கடந்த சனிக்கிழமை தான் விடுவிக்கப்பட்டனர். கட்சினா அதிபரின் சொந்த ஊர். அங்கேயே இந்த நிலைமை என்றால் நாம் யூகித்துக் கொள்ளலாம். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் கேப் டவுனில் தற்போது இந்தியக் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.