சமூக ஊடக தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பயனர்களிடமிருந்து அதிகபட்ச செயலிழப்புகள் பதிவாகியுள்ளன. 






பல ட்விட்டர் பயனர்கள் தங்களால் புதிய ட்வீட்களை பதிவு செய்ய முடியவில்லை என்றும், "நீங்கள் ட்வீட் அனுப்புவதற்கான தினசரி வரம்பைத் தாண்டிவிட்டீர்கள்" என்ற வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ட்விட்டர் நிறுவனம், இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.






 பில்லியனர் எலோன் மஸ்க் அக்டோபரில் நிறுவனத்தை எடுத்துக் கொண்டதில் இருந்து ட்விட்டரின் ஊழியர்களைக் பணிநீக்கம் செய்ததால் இந்த பிழை ஏற்படுகிறது. இது குறைவான பொறியாளர்களுடன் இயங்கி வரும் ட்விட்டர் சேவையின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுந்துள்ளது என தெரிவிக்கின்றனர். 12,000 க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் (Facebook)பயனர்கள் இந்த பிரச்சனையை சந்தித்து வருவதாக புகாரளித்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராம் (Instagram) இல் 7,000 பயனர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    


தற்போது ட்விட்டரில் இந்த சிக்கல் இருந்து வரும் நிலையில் ஜனவரி மாதம், 200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் இமெயில் தொடர்பான தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும் அதை ஆன்லைன் ஹேக்கிங் தளத்தில் அவர்கள் பதிவிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.


ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது குறித்து விரிவாக பேசியுள்ள இஸ்ரேல் நாட்டின் சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால், "இந்த பாதுகாப்பு விதி மீறல் இன்னும் பல ஹேக்கிங்கிற்கு வழிவகுக்கும். 


அதுமட்டுமின்றி, நிறுவனங்கள் அனுப்புவது போல மெயில் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி தனிப்பட்ட தகவல்களை திருட வழிவகுக்கும். இதுவரை நடந்த மிக பெரிய பாதுகாப்பு விதி மீறல் இதுவாகும்" என்றார்.


ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது குறித்த குற்றச்சாட்டுக்கு ட்விட்டர் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பாதுகாப்பு விதி மீறல் தொடர்பான அறிக்கையை முதலில் சமூக வலைதளத்தில்தான் கால் வெளியிட்டிருந்தார்.


தொடர்ந்து இது போல் செயலிழபுகள் அல்லது தகவல்களை ஹேக் செய்வது போன்ற நடவடிக்கைகள் ட்விட்டர் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பயனர்களில் தகவல் பாதுகாப்பை பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.