’உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்..’ எனும் பாடல் வரிகளை நினைவூட்டும் வகையில், சிரியாவில் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து மீட்டெடுக்கப்பட்ட சிறுவன், மீட்புப் பணியாளர்களிடம் வாஞ்சையாக சிரித்து கொஞ்சி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ, காண்போரை மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தி வருகிறது.


தரைமட்டமான துருக்கி நகரங்கள்


துருக்கி- சிரியா எல்லையில், காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்துக்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் பல கட்டங்கள் முற்றிலுமாக நிலைகுலைந்து சரிந்தன. தொடர்ந்து துருக்கியின் ஹரமனமராஸ், எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உள்பட அடுத்தடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்படத் தொடங்கின. 


கடந்த 36 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தொடரும் மீட்புப் பணிகள்


1999ஆம் ஆண்டு 7.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் தான் துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாகக் கருதப்படும் நிலையில், 7.8 ரிக்டர் அளவில் தற்போது பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


பெரியவர்கள் தொடங்கி, சிறு குழந்தைகள் வரை இடிபாடுகளில் இருந்து ஒவ்வொரு நொடியும் மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்து வருகின்றன.


இடிபாடுகளுக்கிடையே நம்பிக்கை ஒளி


இந்நிலையில் இவற்றிலிருந்து மாறுபட்டு, இடிபாடுகளுக்கு இடையேயிருந்து மீட்டெடுக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் வீடியோ நம்மை மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்துள்ளது.  சிரியா, இட்லிப் பகுதி, அர்மனாஸ் கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இந்தக் குழந்தை மீட்கப்பட்ட உணர்வுப்பூர்வமான தருணம் இணைத்தில் வைரலாகியுள்ளது.


இடிந்த வீடு ஒன்றிலிருந்து கரம் எனும் இந்த சிறுவன் மீட்கப்படுவதும், மீட்கப்பட்ட சிறுவன் வாஞ்சையாக மீட்பு பணியாளர்களை அணைப்பதும் அவர்கள் விளையாடுவதும் என உணர்வுப்பூர்வமானத் தருணங்களின் சிறு தொகுப்பாக அமைந்துள்ள இந்த வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.


 


 






இன்று காலை துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.


துருக்கியில்12,391க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 2,992க்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 15,383 பேர் உயிரிழந்துள்ளனர்.