பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி நேற்று 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிஸ்னி சி.இ.ஓ வாக பாப் இகர் பதவியேற்றபின், எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவாகும்.
இதுகுறித்து டிஸ்னி சி.இ.ஓ பாப் இகர் தெரிவிக்கையில், “ நான் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், ‘அந்த ஆண்டின் அக்டோபர் 2ம் தேதி வரை உலகளவில் 1,90,000 பணியமர்த்தினோம். அதில், 80 சதவீதம் பேர் முழு நேர பணியாளர்கள்” என்று தெரிவித்தனர்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக டிஸ்னியின் தாய் நிறுவனமான மாடி நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய இகர், கடந்த 2020 இல் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக இருந்த பாப் சாபெக் கொண்டு வரப்பட்டு, இயக்குநர்கள் குழு ஒரு சில காரணத்திற்காக பாப் சாபெக் வெளியேற்றிய பின்னர் மீண்டும் பாப் இகர் டிஸ்னி சி.இ.ஓ வாக கொண்டு வரப்பட்டார்.
Disney+ இன் சந்தாதாரர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட கடந்த டிசம்பர் 31 அன்று ஒரு சதவீதம் குறைந்து 168.1 மில்லியன் வாடிக்கையாளர்களாக சரிந்ததுதான் ஊழியர்களின் பணி நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
உலகளவில் மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம்தான் இந்த வால்ட் டிஸ்னி. இது பல்வேறு நாடுகளில் தங்களது கேளிக்கை பூங்கா கிளைகளை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் வால்ட் டிஸ்னி நிறுவனம் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த சூழலில், 5.5 அமெரிக்க டாலர்களை செலவை சேமிக்கும் வகையில் சுமார் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. விரைவில் 7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை டிஸ்னி வெளியிடும் என்று கூறப்படுகிறது.
உலகெங்கும் பணிநீக்கம்:
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் மந்த நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். அதை தொடர்ந்து, அமேசான் நிறுவனமும், சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது.
தொடர்ந்து, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சரிவில் உள்ளதால் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களையும், ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதேபோன்று, ஸ்பாட்டிஃபை, பைஜூஸ், ஷாப்பி மற்றும் ஜூம் ஆகிய பெருநிறுவனங்களும், பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டன.