இந்தோனேசியாவில் பழமை வாய்ந்த ஏராளமான கோவில்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. அங்குள்ள பாலி மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. பாலியில் பழமைவாய்ந்த கோவில்களும், பழமையான மரங்களும் உள்ளன. இந்த பழமையான மரங்களை அங்கு வாழும் மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலினா. யோகா செய்வதில் மிகவும் புகழ்பெற்றவரான இவர் தன்னுடைய யோகா குறித்த செயல்முறைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 17 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், பாலி தீவுக்கு சென்ற அலினா அங்குள்ள தபனானில் உள்ள பாபகான் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு 700 ஆண்டுகள் பழமையான மரத்தின் மேல் நிர்வாணமாக சாய்ந்து தனது பின்புறம் தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த பாலியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். தாங்கள் தெய்வமாக வணங்கும் 700 ஆண்டுகள் பழமையான மரத்தின் புனிதத்தை அலினா கொச்சைப்படுத்தியதாக அதிர்ச்சியடைந்தனர். மேலும், நீலூ ஜெலண்டிக் என்ற உள்ளூர் தொழிலதிபர் இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அலினா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் அந்த நாட்டு ஆபாசப்பட சட்ட விதிப்படி 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது, இந்தோனேசியா குடியுரிமை அதிகாரிகள் அலினாவைத் தேடி வருகின்றனர்.
கடுமையான விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்த காரணத்தால் அலினா தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார். மேலும், இந்தோனிசியா பாரம்பரியத்தில் முழுவதும் உடை அணிந்து வழிபடுவது போல புகைப்படத்தை பதிவிட்டு, “என்னுடைய செயலுக்காக இந்தோனிசியா மற்றும் பாலஸ்தீன மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு பதிவில் நான் தெரியாமல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன். இது மீண்டும் நடக்காது என்று கூறுகிறேன். பாலியில் ஏராளமான புனிதமான இடங்கள் உள்ளன. ஆனால், அதற்கான அடையாளங்கள்தான் இல்லை. நான் பாலியை என் மனதார நேசிக்கிறேன். மீண்டும் ஒருமுறை பாலி மக்களிடம் எனது தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்