அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தம்பா நகரத்தில் இருந்து நியூ ஜெர்சிக்கு திங்கள்கிழமை சென்ற விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததையடுத்து பயணிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தின் அலுவலர்கள் அழைக்கப்பட்டனர்.


விமானத்தில் பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "2038 யுனைடெட் விமானத்தின் வாயிலில் இருந்து விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் துறைமுக ஆணையத்தின் காவல் துறை அலுவலர்கள் கார்டர் இன பாம்பை எடுத்து சென்றனர். 






பின்னர், பாம்பு வனத்திற்கு எடுத்து சென்று விடுவிக்கப்பட்டது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானம் இயக்கப்படுவது பாதிக்கப்படவில்லை. பாம்பு குறித்து பயணிகள் விமான பணியாளர்களை எச்சரித்தனர். மேலும், நிலைமையை கையாள அலுவலர்களுக்கு விமான நிறுவனம் அழைப்பு விடுத்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


நியூ ஜெர்சி, நியூஸ் 12 நியூ ஜெர்சியின் உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்திகளை மேற்கோள் காட்டி, விமானத்தின் வணிக வகுப்பில் இருந்த பயணிகள் விமானம் தரையிறங்கிய பிறகு பாம்பைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளது. பயணிகள் அலறியடித்து கால்களை மேலே இழுக்க ஆரம்பித்தனர் என வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


பாம்பு எடுத்து சென்ற பிறகு, பயணிகள் தாங்கள் கொண்டு வந்த சாமான்களுடன் தரையிறங்கினர். மேலும், விமானத்தில் வேறு எதாவுது ஊர்வனம் இருக்கிறதா என தேடப்பட்டது. பொதுவாக கார்டர் பாம்பு ஒவ்வொரு புளோரிடா மாவட்டத்திலும் காணப்படுகிறது. அது விஷ பாம்பு அல்ல.


பொதுவாக 18 முதல் 26 அங்குல நீளமுள்ள இந்த வகை பாம்புகள், மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கிறது. வேண்டுமென்றே துன்புறுத்தப்பட்டால் மட்டுமே கடிக்கும். நியூ ஜெர்சியிலும் கார்டர் பாம்புகள் அதிகமாக காணப்படுகிறது.


முன்னதாக, பிப்ரவரியில், மலேசியாவில் ஏர் ஏசியா விமானத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. விமானம் சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்றை பயணிகள் கண்டனர். அப்போது எடுக்கப்பட்ட டிக் டோக் வீடியோவில், அமர்ந்திருந்த பயணிகளுக்கு மேலே உள்ள விளக்கில் பாம்பு இருந்தது பதிவானது.


இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டில், ஒரு பெரிய பாம்பு மெக்சிகோவில் உள்ள ஏரோமெக்சிகோ விமானத்தின் கண்டெடுக்கப்பட்டது. இது, விஷமுள்ள பச்சை விரியன் என்று கூறப்படுகிறது.