அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி எனும் இரண்டு பிரதான கட்சிகளே அங்கு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டிரம்பை வீழ்த்தி, ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபரானார். அடுத்த தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான ஏற்பாடுகளை நடைபெறத் துவங்கியுள்ளது.


இந்நிலையில் தனது ஆதராவளர்களிடயே உரையாற்றிய டிரம்ப், அமெரிக்காவை சிறந்ததாகவும், பெருமை மிகுந்ததாகவும் மாற்ற நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை  தாக்கல் செய்வதாக கூறினார். இதன் மூலம் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அதேநேரம், அவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்பது, குடியரசுகட்சியில் நடைபெறும் உட்கட்சி தேர்தலின் முடிவிலேயே உறுதி செய்யப்படும். இதனிடையே, அவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது சிரமம் எனவும், அதற்கு 6 முக்கிய காரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


1. கடந்த ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகள்


2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டபோது,  அவர் வெறும் தொழில் அதிபராகவும்,  ரியாலிட்டி ஷோ நட்சத்திரமாகவும் மட்டுமே மக்களிடையே அறியப்பட்டார். அரசு அதிகாரியாக முன்பு எந்த பதவியையும் வகிக்காததால், எதிர்க்கட்சிகளால் டிரம்ப் மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்க இயலவில்லை. அவர் அளித்த பல வாக்குறுதிகளை மக்கள் நம்பினர்.


ஆனால், அந்த நிலை அமெரிக்காவில் தற்போது மாறியுள்ளது. 2016 முதல் 2020 வரையிலான டிரம்பின் ஆட்சிக்காலத்தில், வரிக் குறைப்பு மற்றும் குற்றவியல் நீதி சீர்திருத்தங்கள் உட்பட சில நடவடிக்கைகள் பாரட்டப்பட்டாலும், நிர்வாக ரீதியில் அவர் சில முக்கிய தோல்விகளையும் சந்தித்தார். கொரோனா காலத்தை கையாண்டது, பலனளிக்காத பல வாக்குறுதிகள் டிரம்பின் ஆட்சி மீது கரும்புள்ளியாக உள்ளது.




கேப்பிட்டல் கட்டடம் மீதான தாக்குதல் (COURTESY: PBS)


 


2. கேப்பிட்டல் கட்டிடத்தின் மீதான தாக்குதல்


கடந்த தேர்தலில் டிரம்ப் தோல்வியுற்ற பிறகு, அவரது ஆதரவாளர்கள் கேப்பிட்டல் கட்டிடத்தின் மீது நடத்திய தாக்குதலை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அதிபர் அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்றுவதை தடுக்கும் வகையில் நடைபெற்ற வன்முறையில்,  டிரம்பிற்கு நேரடி தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உட்கட்சியை சேர்ந்த பலரே டிரம்பிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதன் காரணமாக மீண்டும் அவர் வேட்பாளராக தேர்ந்து எடுக்கப்படுவதற்கு, உட்கட்சியிலே பலர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.


3. சட்ட சிக்கல்கள்


தனக்கு எதிராக உள்ள பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதை அறிந்தே, டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வம் கட்டுவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முறைகேடு, அவரது வணிக நிறுவனம் மீதான சிவில் மோசடி வழக்கு, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை உள்ளடக்கிய அவதூறு வழக்கு, கேப்பிட்டல் கட்டடம் மீதான தாக்குதல் மற்றும் அதில்  அவரது பங்கு ஆகிய வழக்குகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார். அவற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே, அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இதில் ஏதேனும் ஒரு வழக்கின் விசாரணை தீவிரமடைந்தாலும், டிரம்ப் தேர்தல் பரப்புரையில் கூட முழுமையாக பங்கேற்க முடியாத சூழல் உருவாகக்கூடும்.


 4. உட்கட்சி போட்டியாளர்கள்


தனிப்பட்ட பல்வேறு காரணங்களை தாண்டி, குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட வேறு சிலரும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு டிரம்புக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்த ஜெப் புஷ் மற்றும் புளோரிடாவின் தற்போதைய ஆளுநராக உள்ள ரான் டிசண்டிஸ் ஆகியோர், 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட  ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. டிரம்புக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள், மற்ற இருவரை ஆதரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


5. சரிந்த மக்களின் ஆதரவு


சமீபத்தில் நடந்து முடிந்த இடைதேர்தலின் போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகளில், டிரம்புக்கான ஆதரவு பொதுமக்களிடையே குறைவாகவே இருப்பது உறுதியாகியுள்ளது. அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்,  ஹாம்ப்சைரில் 30% பேரும், புளோரிடாவில் 33% பேரும் மட்டுமே டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், கடந்த 2015ம் ஆண்டு இருந்ததை காட்டிலும், கூடுதல் ஆதரவே தற்போது டிரம்புக்கு கிடைத்துள்ளது.


6. வயது முதிர்வு


ஒருவேளை அடுத்த தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியானால்,அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட வேண்டியதாக இருக்கும். 78 வயதான நிலையில் அது அவருக்கு எளிதான காரியமாக இருக்க வாய்ப்பில்லை. கடந்த தேர்தலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டாலும், அது இம்முறை சாத்தியமாக வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.