அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலாகும். இரண்டே கட்சிகள் தங்களது ஒரே அதிபர் வேட்பாளரை அறிவித்து அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அதிபர் ஆவார்கள். கடந்த 2020 தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ட்ரம்பை வென்று அதிபராக இருக்கிறார். அடுத்த தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான ஏற்பாடுகளை நடைபெறத் துவங்கும், அதுவே அமெரிக்க தேர்தல் முறை. அப்படி 2024-இல் அடுத்ததாக நடக்கவிருக்கும் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடப்போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை உயர்த்துவது
குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சியில் இருந்து தங்கள் வேட்பாளரை முறையாக அறிவித்த முதல் பெரிய போட்டியாளர் டிரம்ப் ஆவார். "அமெரிக்காவின் சிறப்பாக்கத்துக்கான கூறுகள் இப்போதே தென்பட தொடங்குகிறது," என்று 76 வயதான அவர் அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாக, என்று செய்தி நிறுவனமான AFP மேற்கோள் காட்டியது.
வேட்புமனுவை அறிவித்தார்
"இன்று நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக மாறும் என்று நம்புகிறேன்!" டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆதரவாளர்களிடம் பேசுகையில் "அமெரிக்காவை சிறந்ததாகவும், பெருமை மிகுந்ததாகவும் மாற்ற நான் அமெரிக்க ஜனாதிபதிக்கான எனது வேட்புமனுவை இன்று இரவு தாக்கல் செய்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகிறார்.
ட்ரம்பின் நிலை
2016 தேர்தலில் தொழில் அதிபரும் ரியாலிட்டி ஷோ நட்சத்திரமும் ஆன இவர் பெற்ற வெற்றி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. குடியரசுக் கட்சித் தலைவரான டிரம்ப் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும் இன்னும் அவரைப் பின்தொடர்பவர்களிடையே அவருடைய செல்வாக்கு அப்படியே உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான தனது லட்சியங்களைப் பற்றி சமீப காலங்களாக அதிகம் குரல் கொடுத்து வருகிறார். எனவே இவர் மீண்டும் போட்டியிட்டால் கடுமையான போட்டியை தருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.