செப்டம்பர் 29 அன்று ஜிம்பாப்வேயில் நடந்த விமான விபத்தில் இந்திய கோடீஸ்வரரும் சுரங்க அதிபருமான ஹர்பால் ரந்தாவா மற்றும் அவரது 22 வயது மகன் அமர் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச் சுரங்கம் அருகே அவர்களின் தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹர்பால் ரந்தாவா தங்கம், நிலக்கரி, நிக்கல் மற்றும் தாமிரத்தை சுத்திகரிக்கும் பல்வகைப்பட்ட சுரங்க நிறுவனமான RioZim இன் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் தனியார் பங்கு வணிகமான GEM ஹோல்டிங்ஸ் நிறுவனத்தையும் நிறுவினார். சுரங்க அதிபரும் அவரது மகனும் ரியோசிம் தனியாருக்குச் சொந்தமான செஸ்னா 206 விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் ஹராரேயில் இருந்து முரோவா வைரச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
ஹர்பால் ரந்தாவாவின் நண்பரான திரைப்படத் தயாரிப்பாளர் ஹோப்வெல் சினோனோ, எக்ஸ் தளத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருந்தார். அந்த பதிவில், " விமான விபத்தில் இறந்த ரியோ ஜிம் உரிமையாளரான ஹர்பால் ரந்தாவாவின் மறைவு குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அவரது மகன் உட்பட இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், “ எப்போதும் வாழ்க்கையை பற்றிய ஆலோசனைகளை வழங்கிக்கொண்டு இருப்பார். பில்லியனராக இருந்தாலும் சற்றும் தலைக்கணம் இல்லாதவர். மிகவும் எளிமையானவர். அவர் மூலம் நான் வணிக, இராஜதந்திர மற்றும் அரசியல் உலகில் பலரை சந்தித்தேன். மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரியோ ஜிம் சமூகத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும், ஜிம்பாப்வேயில் நீங்கள் ஆற்றிய பணி மக்கள் மனதில் என்றும் நினைவாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார். நாளை அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டப்பின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.