சிங்கப்பூரில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் திகழ்வதால், உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக சிங்கப்பூர் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
சிங்கப்பூர் அதிபர் தேர்தல்:
சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம், வருகிற செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழலில், சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், தமிழரான தர்மன் சண்முக ரத்னத்திற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வந்தாலும், தர்மன் சண்முக ரத்னம், மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளார்.
"இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை"
அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தனது வெற்றி குறித்து பேசியுள்ள தர்மன் சண்முக ரத்னம், "நான் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களும், இது அரசியல் ரீதியான தேர்தல் அல்ல என உணர்ந்து, அறிவுப்பூர்வமாக வாக்களித்துள்ளனர். என் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, கட்சி சார்பற்ற நபராக என்னை தேர்வு செய்துள்ளனர். இது மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதிபர் பதவியை நிறைவு செய்யும் ஹலிமா யாகோப்பை சந்தித்து நான் அவரின் அறிவுரையையும், ஆலோசனையையும் பெறுவேன்" என்றார்.
சிங்கப்பூர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்:
இதற்கு முன்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் சிங்கப்பூருக்கு அதிபராக பதவி வகித்துள்ளனர். எஸ்.ஆர். நாதன் என அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன், 2009ஆம் ஆண்டு, பெஞ்சமின் ஷீரஸை தோற்கடித்து அதிபராக தேர்வானார். சிங்கப்பூரின் நீண்ட காலமாக அதிபர் என்ற பெருமை இவரையே சாரும். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர், அரசு ஊழியராக பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூரின் மூன்றாவது அதிபரான தேவன் நாயர், 1981ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை, தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை அதிபராக பதவி வகித்தார். 1923இல் மலேசியாவின் மலாக்காவில் பிறந்த இவர், கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த ஒரு ரப்பர் தோட்ட எழுத்தரின் மகனாவார். இவரின் உண்மையான பெயர் செங்கரா வீட்டில் தேவன் நாயர்.