சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு 6 மாதங்கள் சீர்திருத்தப் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 21 வயதுக்கும் குறைவான குற்றவாளிகளுக்கு இப்படியான சீர்திருத்தப் பயிற்சிகளை சிங்கப்பூர் அரசு அளித்து வருகிறது. இந்த வழக்கில் தன்னுடன் மது போதையில் இருந்த தோழியைப் பாலியல் வன்கொடுமை செய்ததால், இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இருபது வயதான ஹரி கிஷன் பாலகிருஷ்ணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும், அதனைப் படம் பிடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டார். பாலியல் அத்துமீறல் வழக்கு ஒன்றும் அவர் மீது பதியப்பட்டது. 


குற்றவாளியான ஹரி கிஷன் தனது 23 வயது தோழிக்கு மது கொடுத்து, போதையில் மூழ்கச் செய்து, வன்கொடுமை செய்து, அதனை 7 வீடியோக்களாகப் பதிவுசெய்துள்ளார். அவர் படம் பிடித்தததை அழித்த போதும், காவல்துறையினர் விசாரணையின் மூலம், அவர் அழித்த வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளன. 



ஹரி கிஷனை வயது வந்தோராக கருதி, அதன் மீது வழக்கு நடைபெற்றிருந்தால், அவருக்குக் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரம்பு அடியும் வழங்கப்பட்டிருக்கும் என அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சீர்திருத்தப் பயிற்சிகளை, அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் கால அவகாசம் தீர்மானிக்கப்படுகிறது. 


மாவட்ட நீதிபதி மே மெசெனாஸ் இளம் குற்றவாளிகளுக்கு சீர்திருத்தம் மட்டுமே மிகப்பெரிய தீர்வாக அமையும் என்றும், ஹரி கிஷனின் குற்றச் செயலில் தண்டனை வழங்குவதற்கும் இடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.


குற்றம் சாட்டப்பட்ட ஹரி கிஷன் பாதிக்கப்பட்ட பெண்ணை வேறொரு நண்பரின் வீட்டில் வைத்து. சுமார் 17 நிமிடங்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அரை மயக்கத்தில் இருந்ததால், கண்ணைத் திறக்கவோ, எதிர்த்துச் சண்டையிடவோ முடியாமல் இருந்ததாகக் கூறியுள்ளார். எனினும், அவர் குற்றவாளி செய்து கொண்டிருந்ததை உணரும் நிலையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். 



குற்றம் செய்த மறுநாளே ஹரி கிஷன் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீடியோ எடுக்க பயன்படுத்திய போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை முதலான குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் விதிக்கப்படுவதோடு, பிரம்படியும் தண்டனையாக வழங்கப்படும் சட்டம் அமலில் இருக்கிறது. ஆபாசப் படம் எடுப்பவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம். சில சமயங்களில் அபராதமும், சிறைத் தண்டனையும் சேர்த்து வழங்கப்படும்.