பொதுவாக இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் திருமணங்கள் என்றால் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் இருக்கும். இந்தக் கொண்டாட்டத்திற்கு பல லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை செலவு செய்யப்படுவது வழக்கம். திருமணத்திற்கான ஏற்பாடு தொடங்கி, உணவு, உடை, கலை நிகழ்ச்சிகள் எனப் பல ஏற்பாடுகள் ஒரு திருமணத்தில் நடைபெறும். இந்த ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று உணவு தான். அந்த உணவிற்கு தான் பெரும்பாலானோர் அதிகமாக செலவு செய்வார்கள். அப்படி ஒரு திருமணத்தில் உணவிற்காக அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை சாப்பிட உரியவர்கள் வராததால் அவர்களுக்கு அந்த உணவிற்கான செலவை கட்டணமாக அந்தத் திருமண தம்பதி அனுப்பியுள்ளது. யார் அவர்கள்? 


அமெரிக்காவின் சிகாகோ பகுதியைச் சேர்ந்த டக் மற்றும் டெட்ரா சிம்மன்ஸ் ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணம் ஜமைக்காவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பிரத்யேக ஏற்பாடு உடன் மிகவும் ஆடம்பரமாக நிகழ்ந்துள்ளது. இந்த திருமணத்திற்கு அத்தம்பதி நல்ல செலவு செய்துள்ளனர். மேலும் கொரோனா காலம் என்பதால் முன்பாகவே எத்தனை பேரை கூப்பிட வேண்டும் என்று தீர்மானித்து அவர்களுக்கு மட்டும் சரியாக உணவு உள்ளிட்ட மற்ற வசதிகளை அந்த விடுதியில் செய்துள்ளனர். 



அப்படி இருக்கும் பட்சத்தில் இருவர் தங்களுடைய திருமணத்திற்கு வருவதாக கூறிவிட்டு கடைசி நிமிடத்தில் வராமல் இருந்துள்ளனர். எனவே அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் இதர வசதிகள் அனைத்தும் வீணாகியுள்ளது. எனவே இதற்கு ஏற்பட்ட செலவை உரிய நபர்களிடம் வசூலிக்க அத்தம்பதி முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த நபர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளுக்கு ஏற்பட்ட செலவாக 240 அமெரிக்க டாலர் தரவேண்டும் என்று ஒரு பில் உடன் மின்னஞ்சல் செய்துள்ளனர். 


அதில், "நீங்கள் எங்களுடைய திருமணத்திற்கு வருவதாக கூறியதால் உங்களுக்காக  முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதி வரை நீங்கள் வராததால் அந்த இடம் வீணாகிவிட்டது. மேலும் நீங்கள் கடைசி வரை வர இயலவில்லை என்பதை தெரிவிக்கவே இல்லை. ஆகவே உங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட வசதிகளுக்கு ஏற்பட்ட செலவை இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். இதை நீங்கள் பே பால் வசதி மூலமாக அல்லது ஆன்லைன் மூலமாகவோ எங்களுக்கு செலுத்தலாம்" எனக் கூறியுள்ளனர். 



திருமணத்திற்கு வராத நண்பர்களிடம் அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட உணவு உள்ளிட்ட இதர வசதிகளுக்கு பணம் கேட்ட தம்பதியின் செயலை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் பலரும் இந்த தம்பதியை பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் ஒவ்வொரு திருமணங்களிலும் இதுபோன்று நிறையே விஷயங்கள் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. அதை தடுக்க இது ஒரு நல்ல வழி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய மதிப்பின் படி 240 அமெரிக்க டாலர் என்பது சுமார் 17,530 ரூபாயாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: என்னது தங்கத்துல வடபாவ் ..எங்கய்யா செய்றாங்க ..!- வைரல் வீடியோ !