உலகளாவிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மையமாக இருப்பது சிலிக்கான் வேலி. அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள சிலிக்கான் வேலி உலக புகழ்பெற்றது.
அடோப், ஆல்பாபெட், ஆப்பிள், சிஸ்கோ, இபே உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமையகங்கள் அங்குதான் அமைந்துள்ளது. அங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற வங்கிதான் சிலிக்கான் வேலி வங்கி. தொழில்நுட்பதுறையில் தொடங்கப்படும் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த வங்கிதான் கடன் வழங்கி வந்தது.
திவாலான சிலிக்கான் வேலி வங்கி:
இந்த நிலையில், இந்த வங்கி திவாலானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள், வைப்பாளர்கள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலக சந்தைகள், வங்கியின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு, உலக பொருளாதார பெருமந்தத்திற்கு பிறகு வங்கித்துறை சந்திக்கும் மிக பெரிய நெருக்கடி இதுவாகும்.
சிலிக்கான் வேலி வங்கியை மூடிய அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள், அதன் வைப்பு தொகையை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்தனர். சிலிக்கான் வேலி வங்கியின் பங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்தது. அதன் வாடிக்கையாளர்கள் வைப்பு தொகையாக செலுத்திய தொகையை திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு நிதி சிக்கலை சந்தித்த நிலையில், வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
கவலையில் முதலீட்டாளர்கள்:
தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது சிலிக்கான் வேலி வங்கி. இதை தொடர்ந்து, அதன் பெரும்பாலான சொத்துக்களை அமெரிக்க பத்திரங்களில் முதலீடு செய்தது. பணவீக்க விகிதங்களைக் குறைக்க, கடந்த ஆண்டு அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியது. இதன் விளைவாக பத்திர மதிப்புகள் குறைந்தன.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் அளிக்க முடியாத நிதி சிக்கல் உருவாகியது. இதன் விளைவாக வங்கியின் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் தங்களின் வைப்பு தொகையை திருப்பி எடுத்தனர்.
அவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், முதலீடுகளின் பங்கு குறைந்திருந்த போதிலும், அதை விற்க வேண்டிய கட்டாயம் சிலிக்கான் வேலி வங்கிக்கு ஏற்பட்டது.
இந்த வார தொடக்கத்தில், கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களை இழந்ததாக வங்கி அறிவித்தது. வங்கி மூடப்பட்ட பிறகு, வைப்பு தொகையாக இருந்த கிட்டத்தட்ட 175 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்(FDIC) கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே, நேஷனல் பேங்க் ஆஃப் சாண்டா கிளாரா என்ற புதிய வங்கியை உருவாக்கியுள்ளது ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன். தற்போது, சிலிக்கான் வேலி வங்கியின் அனைத்து சொத்துக்களையும் இது பராமரிக்கும். அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களின் நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு முழு நம்பிக்கையை தெரிவித்துள்ளது.