வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அங்கும் இங்குமாய் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, இனவெறி தாக்குதல் நடந்து வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. சமீபத்தில், கூட, ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் இந்தியர்கள் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
வெளிநாடுகளில் தொடரும் இனவெறி தாக்குதல்:
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் சீக்கியர் ஒருவர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, தன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருவதாக பாதிக்கப்பட்ட சீக்கியரான ஜர்னைல் சிங் தெரிவித்துள்ளார். டாஸ்மானியா மாகாணம் ஹோபார்ட் நகரில் உணவு விடுதி வைத்திருப்பவர் ஜர்னைல் சிங்.
தன் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் குறித்து மனம் நொந்து பேசிய அவர், "கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே, நான் பல முறை இனரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டேன். தாய்நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி, நாயின் மலத்தை எனது காரில் பூசுகிறார்கள்" என்றார்.
ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் விரிவாக பேசியுள்ளார். "இதற்கு முன் எனக்கு இப்படி நடந்ததில்லை. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இது அதிகமாக நடக்கிறது. வீட்டிற்கு வரும்போது அது மனதளவில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது. குறிப்பாக, குறிவைத்து தாக்கப்படுகிறேன். அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. ஏதாவது செய்ய வேண்டும்.
சீக்கியருக்கு நேர்ந்த கொடூரம்:
கடந்த நான்கு, ஐந்து நாள்களாக, வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட காரின் ஜன்னல்களிலும் கதவுகளிலும் நாயின் மலத்தை பூசிவிட்டு சென்றதாக கூறுகிறார் ஜர்னைல் சிங். காரை ஓட்டி செல்லும் பாதைகளில் சுவற்றில் இனவெறியை தூண்டும் வகையில் வாசகங்களை எழுதி வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"இந்தியாவுக்கு திரும்பி போ" என சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. அவர் இந்த விஷயத்தை போலீசில் புகார் செய்தார். ஆனால், வீடியோ ஆதாரம் இல்லாமல், அதன் பின்னணியில் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறும் ஜர்னைல் சிங், "முதலில் அந்தக் கடிதம் ஒரு இளைஞரால் எழுதப்பட்டதாகக் கருதி, போலிஸில் புகார் அளித்த பிறகு, அதைப் புறக்கணிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இந்த சம்பவம் நடந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த அடுத்த கடிதம், முதல் கடிதத்தை விட மிகவும் புண்படுத்தக்கூடியதாக இருந்தது" என்றார். ஆஸ்திரேலியாவில் சுமார் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார் ஜர்னைல் சிங். அதில், 10 ஆண்டுகள் டாஸ்மேனியாவில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.