இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஹமாஸ் படைகளை ஒழிக்கும் நோக்கில் போர் செய்து வரும் இஸ்ரேல், காசா நகரத்தின் மீது வான்வழி, தரைவழி என தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
துறைமுகத்தை கைப்பற்றிய இஸ்ரேல்:
இஸ்ரேல் ராணுவத்தின் துருப்புகள் காசா நகரத்தில் முன்னேறி வரும் சூழலில், காசா நகரத்தின் வடக்குப்பகுதியில் உள்ள துறைமுகத்தை கைப்பற்றியுள்ளது. இதை அந்த நாட்டு ராணுவமே அறிவித்துள்ளது. காசா நகரத்தின் இந்த துறைமுகத்தின் அருகே 12க்கும் மேற்பட்ட ராணுவ டேங்குகளும், ஏராளமான வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் குவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ ஹமாஸ் அமைப்பால் இயக்கப்படும் காசா துறைமுகத்தின் செயல்பாட்டை இஸ்ரேல் பாதுகாப்பு படை கைப்பற்றியுள்ளது.
மக்களைப் போல மாறுவேடமிட்டு, ஹமாஸ் இந்த துறைமுகத்தை பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் தங்கள் கடற்படை கமாண்டோ படைகளுக்கு பயிற்சி நிலையமாக பயன்படுத்தியது.
188வது கவசப்படையின் படைப்பிரிவு மற்றும் புளோட்டிலா 13ன் வீரர்கள் நடத்திய இந்த நடவடிக்கையின்போது ஏராளமான பயங்கரவாத சுரங்கப்பாதை நுழைவுவாயில்கள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் படையினரான போர் காரணமாக இஸ்ரேல் ராணுவம் காசா நகரம் மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் சடலம், சடலமாக மீட்கப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி மக்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி வருகிறது.
காசா நகரத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், ஐ.நா.வின் முகாம்களில் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போரை காட்டிலும் மிகவும் மோசமான போராக இந்த போர் நடைபெற்று வருவதால் உலக நாடுகள் இந்த போரை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.