இஸ்ரேல் மீது கடந்த வாரம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. வான் வழி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ளனர்.


 இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 6 வாரங்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்காலிகமாக 4 நாட்கள் மட்டும் போர் நிறுத்தி வைக்க இஸ்ரேல் அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சுமார் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 1,200 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.






இதற்கு முன்பாக கடந்த 6 ஆம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள துல்ஹரம் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. அதில் 3 ஆயுத குழுவினர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்நிலையில் அந்த அகதிகள் முகாமில் ஆயுத குழுவினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கொடுத்ததாக 2 பாலஸ்தீனியர்களை ஆயுத குழுவினர் சுட்டுக் கொலை செய்தனர். பின் இரண்டு பேரின் உடலை பொது வெளியில் இருக்கும் மின் கம்பத்தில் கட்டித் தொங்க விட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






இது ஒரு பக்கம் இருக்க காசாவிற்கு தொடர்ச்சியாக அடிப்படை வசதிகளான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள் ஆகியவை லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க, எகிப்து, கத்தார் மற்றும் ஐ.நா தரப்பில் இந்த உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.






நான்கு நாள் போர் நிறுத்தத்தில் 17 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 இஸ்ரேலியர்களும் தாய்லாந்தை சேர்ந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்ரேலில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.