சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளுக்கு H9N2 மற்றும் சுவாச நோய்களின் பரவலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நிமோனியா பாதிப்பு:
மேலும், சீனாவில் பரவும் காய்ச்சலால் இந்தியாவுக்கு குறைவான பாதிப்பே இருக்கும் என் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நிமோனியா பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிமோனியா என்பது வழக்கமாக நுரையீரலை பாதிக்கும் நோயாகும். சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை இந்த நோயின் அறிகுறியாகும். ஆனால், தற்போது சீனாவில் பரவி வரும் நிமோனியா வழக்கமான நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளுடன் காணப்படுகிறது என்றும் புதிய நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைச்சகம்:
2023 அக்டோபரில், நாட்டில் H9N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு எதிரான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) தலைமையின் கீழ் சமீபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு சீனா தகவல் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி ஒரு மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனுக்கு பரவும் சாத்தியம் குறைவாக தான் உள்ளது என்றும் இறப்பு விகிதமும் குறைவாக தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் வனவிலங்கு துறைகளுக்கு இடையே கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், “சீனாவில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட H9N2 பாதிப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களின் பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அப்படி தொற்று பரவினாலும் அதனை சமாளிப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த சுகாதார துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், PM-Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM) பிரதம மந்திரியால் தொடங்கப்பட்டது, இது சுகாதார அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் திறன்களை அனைத்து மட்டங்களிலும், முதன்மை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை, திறம்பட செயல்படும் வகையில் சுகாதார அமைப்புகளைத் தயார்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.